மத்திய கல்வி வாரியம் (CBSE) இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய அறிமுகப்படுத்திய புதிய ஆன்லைன் முறை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்பக் கோளாறுகளால் மாணவர்களின் விடைத்தாள்கள் மாறிய விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
CBSE 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாடு முழுவதும் உள்ள 7,574 தேர்வு மையங்களில் 2026 பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 10 வரை நடத்தப்பட்டன. தேர்வு முடிவுகள் 2026 மே 13 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன.
முடிவுகள் வெளியான பிறகு, மாணவர்கள் தங்களின் விடைத்தாள் நகல்களை ஆன்லைன் மூலம் சரிபார்க்கும் தளம் மே 19 முதல் 20 வரை திறக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் சுமார் 98 லட்சம் விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, டிஜிட்டல் முறையில் ஆன்லைனில் திருத்தப்பட்டன.
புதுடெல்லியைச் சேர்ந்த வேதாந்த் ஸ்ரீவஸ்தவா என்ற மாணவர், தனது இயற்பியல் விடைத்தாளின் நகலை ஆன்லைனில் பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். அதில் இருந்தது வேறு ஒருவரின் கையெழுத்து, எழுதும் முறை அனைத்தும் மாறியிருக்கிறது என்றும், அவரது ஆங்கிலம் மற்றும் கணினி அறிவியல் விடைத்தாள்களோடு ஒப்பிட்டுப் பார்த்தபோது இந்த குளறுபடி ஆதாரங்களுடன் அம்பலமானது.
இந்த தவறான விடைத்தாளால் 50% மதிப்பெண் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் உயர்கல்விக்கு தேவையான 75% மதிப்பெண் தகுதியை இழந்துள்ளேன் என்று வேதாந்த் பதிவிட்டுருந்தார். இதேபோல் மற்றொரு மாணவியும், தனது வேதியியல் விடைத்தாளை முதல் பக்கத்தில் தன்னுடைய கையெழுத்து இருந்ததாகவும், உள்ளே இருந்த பக்கங்கள் வேறு ஒருவருடையது என்றும் புகார் அளித்துள்ளார்.
X தளத்தில் இந்த விவகாரம் பரவியதையடுத்து, CBSE அதிகாரிகள் உடனடியாகச் செயல்பட்டு தவறை ஒப்புக்கொண்டனர். மே 25 ( திங்கட்கிழமை ) மாலை, மாணவர் வேதாந்தைத் தொடர்பு கொண்டு அவரது உண்மையான "சரியான" விடைத்தாளை அவரிடம் முறைப்படி ஒப்படைத்தனர்.
விடைத்தாள்கள் டிஜிட்டல் மயமாக்கலின் போது மாறியதை வாரியம் உறுதி செய்துள்ளது. இத்தகைய குளறுபடிகளால் ஆன்லைன் திருத்தும் முறையின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.
இதையடுத்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டு, தொழில்நுட்பக் கோளாறுகளை முழுமையாக ஆராய ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஐஐடி கான்பூர் கல்வி நிறுவனங்களின் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பேராசிரியர்கள் அடங்கிய சிறப்புக் குழுவை நியமித்துள்ளார்.