இந்தியா

12-ம் வகுப்பு விடைத்தாள் நகல்களை பெற காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு!

மாணவர்களுக்கு போதுமான அவகாசம் அளிக்கும் வகையிலும், கடைசி தேதி மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை பெற விரும்பும் மாணவர்களுக்கான காலக்கெடுவை, ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நீட்டித்துள்ளது. அதன்படி, கடைசித் தேதி தற்போது மே 25 நள்ளிரவு என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இணையதளம் மூலம் விடைத்தாள்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை பெறுவதில் உள்ள சிரமங்கள் குறித்து மாணவர்கள் அளித்த புகார்களை தொடர்ந்து, சி.பி.எஸ்.இ. முன்னதாக காலக்கெடுவை மே 22-ஆம் தேதியில் இருந்து மே 23 வரையிலும், பின்னர் மே 24-ஆம் தேதி வரையிலும் நீட்டித்தது. இந்த நிலையில் மீண்டும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டு தற்போது மே 25-ஆம் தேதி நள்ளிரவு வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

மே 22-ஆம் தேதியிட்ட சுற்றறிக்கையின் தொடர்ச்சியாகவும், மதிப்பீடு செய்யப்பட்ட தங்களது விடைத்தாள்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை பெறுவதற்கான கோரிக்கைகளை சமர்ப்பிக்க மாணவர்களுக்கு போதுமான அவகாசம் அளிக்கும் வகையிலும், கடைசி தேதி மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று வாரியம் தெரிவித்துள்ளது.

"இந்த வசதியின் மற்ற அனைத்து விதிமுறைகளும் நிபந்தனைகளும் மாற்றமின்றி தொடரும்" என்று தெளிவுபடுத்திய அதேவேளையில், நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவை பயன்படுத்திக்கொண்டு அதற்கேற்ப தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு விண்ணப்பதாரர்களுக்கு வாரியம் அறிவுறுத்தியது.

"மறுமதிப்பீட்டுக் கோரிக்கைகளை ஏற்கும் தொடக்கத் தேதி விரைவில் தெரிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது," என அந்தச் சுற்றறிக்கை தெரிவித்தது.