ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனரான சுபாஷ் சந்திரா, எல்ஐசி ஹவுசிங் ஃபை-னான்ஸ் லிமிடெட் (LICHFL) நிறுவனத்திடமிருந்து ரூ.1,322 கோடி கடனை முறைகேடாகப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், சிபிஐ அதிகாரிகள் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எல்.ஐ.சி நிறுவனத்திடம் இருந்து 2018 மார்ச் 28 அன்று, வசந்த் சாகர் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பான் இந்தியா இன்ஃப்ரா ப்ராஜெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் ரூ.500 கோடியை கடனாக பெற்றது.
இந்த கடன் தொகைக்கு உத்தரவாதமாக ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் (ZEEL) மற்றும் எசெல் குழுமத்தின் நிறுவனரான சுபாஷ் சந்திரா, 2017 மார்ச் 31 நிலவரப்படி தன்னிடம் ரூ.59,113.21 கோடி மதிப்பிலான நிகர சொத்துகள் உள்ளதாக DJM & Co., வழங்கிய சான்றிதழை எல்.ஐ.சி நிறுவனத்திடம் சமர்ப்பித்தார்.
மேலும், இதைத்தொடர்ந்து எல்.ஐ.சி நிறுவனத்திடம் இருந்து, டிஜிட்டல் சப்ஸ்கிரைபர் மேனேஜ்மென்ட் அண்ட் கன்சல்டன்சி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்பிரிட் இன்ஃப்ராபவர் அண்ட் மல்டிவென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் ரூ.480 கோடியை கடனாக பெற்றது.
இந்த கடன் தொகைக்கு உத்தரவாதமாக சுபாஷ் சந்திரா தன்னிடம் ரூ. 40,562 கோடி மதிப்பிலான நிகர சொத்துக்கள் உள்ளதாக MPJ & Co. வழங்கிய சான்றிதழை எல்.ஐ.சி நிறுவனத்திடம் சான்றிதழை சமர்ப்பித்தார்.
சுபாஷ் சந்திராவிடம் இருந்து ஆகஸ்ட் 10, 2018 பெறப்பட்ட கடிதத்தின் உத்தரவாதம் அடிப்படையில் எல்.ஐ.சி நிறுவனம், இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் கடன் தொகையை வழங்கியது.
இதையடுத்து கடன் வாங்கிய வசந்த் சாகர் மற்றும் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் தங்களது கடன் தவணைகளை செலுத்தாமல் போயின.
இதைத்தொடர்ந்து எல்.ஐ.சி நிறுவனம் சிபிஐ-யில் தாக்கல் செய்த வழக்கில், 2016 ஆம் ஆண்டின் திவால் மற்றும் நொடித்துப்போதல் சட்டத்தின் கீழ், கடன்களுக்கு ஒப்புதல் பெறுவதற்காக LICHFL நிறுவனத்திடம் சந்திரா சமர்ப்பித்த சான்றிதழ்களில் குறிப்பிடப்பட்டிருந்த நிகர சொத்து மதிப்பின் தவறானது என்று குற்றம்சாட்டியது.
மேலும் சந்திரா, கடன் வாங்கியவர்களான வசந்த் சாகர் பிராப்-பர்டீஸ், பான் இந்தியா இன்ஃப்ராப்ராஜெக்ட்ஸ், டிஜிட்டல் சப்ஸ்கிரைபர் மேனேஜ்மென்ட், ஸ்பிரிட் இன்ஃப்ராபவர் மற்றும் மல்டிவென்ச்சர்ஸ் ஆகியோருடனும், அவர்களின் அதிகாரிகள் மற்றும் இயக்குநர்களுடனும் இணைந்து கூட்டுச்சதி செய்து, எல்.ஐ.சி. எச்.எஃப்.எல் நிறுவனத்திடம் இருந்து கடன்களை முறைகேடாகப் பெற்றுள்ளதாக சிபிஐ-யில் புகார் அளிக்கப்பட்டது.
கடன் வாங்கியவர்களுக்கு நிதியை வழங்குமாறு LICHFL நிறுவனத்தை ஏமாற்றும் நோக்கில், அவர் தனது நிகர சொத்து மதிப்பை மிகைப்படுத்தி போலி ஆவணங்களை உருவாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.
மேலும் 2024-ஆம் ஆண்டில் சந்திராவின் நிகர சொத்து மதிப்பு ரூ. 31.79 கோடியாக இருந்ததாகவும் சிபிஐ-யில் எல்.சி.சி. எஃப்.எஃப்.எல் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.