ராஜஸ்தானில் 99 கிசான் கிரெடிட் கார்டு (KCC) கடன்களை முறைகேடாக அனுமதித்து வழங்கியதன் மூலம், ரூ. 2.08 கோடி வங்கி மோசடியில் ஈடுபட்ட நபர், 21 ஆண்டுகளுக்கு மேலாக சட்ட அமலாக்க அமைப்புகளிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்த நிலையில், சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்வர் லால் லகோதியா என்று அடையாளம் காணப்பட்ட அந்த நபர், சிபிஐ-யின் பிரத்யேக குழு மேற்கொண்ட தொடர் முயற்சிகள் மற்றும் கிடைத்த உளவு தகவல்களின் அடிப்படையில், குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் வியாழக்கிழமை பிடிபட்டதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.
தலைமறைவாக இருந்த காலத்தில், லகோதியா தனது அடையாளத்தை மறைப்பதற்காக 'ராஜ்குமார் மகேஸ்வரி' என்ற பெயரை பயன்படுத்தியதோடு, போலியான அடையாள ஆவணங்களையும் உருவாக்கி சட்ட அமலாக்க அமைப்புகளை ஏமாற்றி வந்துள்ளார்.
இந்த மோசடியானது, ராஜஸ்தானின் பிகானர் மாவட்டத்தில் இருந்த 'ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானர் அண்ட் ஜெய்ப்பூர்' (SBBJ) வங்கியின் ஜாலு கிளையில், 99 கிசான் கிரெடிட் கார்டு கடன்களை முறைகேடாக அனுமதித்து வழங்கியதோடு தொடர்புடையதாகும்.
கிசான் கிரெடிட் கார்டு கடன்கள், விவசாயிகள் தங்களின் விவசாயம் மற்றும் அது சார்ந்த செயல்பாடுகளுக்கு தேவையான கடன் தொகையை உரிய நேரத்தில் பெறுவதற்காக உருவாக்கப்பட்டவை ஆகும். இந்த வங்கி மோசடி வழக்கில், "21 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த நபர்" என்று லகோதியாவை சி.பி.ஐ. குறிப்பிட்டுள்ளது.