தலைநகர் டெல்லியில் வரும் 25-ம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு, கர்நாடகா இடையே காவிரி நீர் பகிர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அவ்வப்போது கூடி வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. மேலும், காவிரி ஒழுங்காற்றுக் குழுவும், காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் கூடி தண்ணீர் திறப்பு பற்றி விவாதிக்கின்றன.
இதற்கிடையே, வடகிழக்கு பருவமழை குறைந்து வரும் நிலையில் டெல்டா மாவட்டங்களின் பாசன தேவையைப் பூர்த்தி செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது. அதேவேளை, காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் நேற்று டெல்லியில் நடந்தது.
இதில் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றனர். தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 2,000 கனஅடி நீர் திறக்க இக்கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது.
அதேவேளை, கடந்த 6ம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் காவிரியில் இருந்து வினாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டது. இந்த இரு உத்தரவுகளையும் கர்நாடக அரசு பின்பற்றவில்லை.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் வரும் 25-ம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தேவையான நீரை உடனடியாக திறக்க கர்நாடகாவுக்கு ஆணையம் அறிவுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.