இந்தியா

சாதிரீதியான பாகுபாடு - மும்பை ஐஐடி மாணவர் தற்கொலை வழக்கில் பெற்றோர் திடுக்கிடும் தகவல்!

தேர்வின் போது கைப்பேசியைப் பயன்படுத்தியதற்காகப் பிடிபட்ட பின்னர், மாணவர் இடைநீக்கம் செய்யப்படுவார் என மிரட்டப்பட்டதாகப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குற்றம் சாட்டினர்.

மும்பை ஐ.ஐ.டி.யில் 22 வயது மாணவர், கல்லூரி விடுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த சாஹில் வாகோடே என்ற மாணவர், தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய நிலையில், பின்னர் சாதிய ரீதியிலான பாகுபாடு, நிர்வாக துன்புறுத்தல் உள்ளிட்ட காரணங்களை பெற்றோர் பட்டியலிட, வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

பி.டெக். இரண்டாம் ஆண்டு படித்துவந்த சாஹில் ரவீந்திரா வெள்ளிக்கிழமை (செப்.18) மாலை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

சாஹிலின் தந்தை அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்படும் என்றும் டிசிபி தத் நலவாடே தெரிவித்தார்.

CHATGPT பயன்பாடு

கடைசியாக கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் சாஹில் தொலைபேசியை பயன்படுத்தியதாகவும், சாட் ஜிபிடியில் வினாத்தாளைப் பதிவேற்றி விடைகளை பெற முயன்றதாகவும், இதனை ஆசிரியர்கள் கண்டறிய, துறைத்தலைவரும், அப்பாட ஆசிரியரும் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.

மேலும் இதுதொடர்பாக சாஹில்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என அவர்கள் உறுதியளித்தாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இச்சம்பவத்திற்கு பிறகு விடுதிக்கு திரும்பிய சாஹிலை நண்பர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். சாஹிலிடமிருந்து எந்தப் பதிலும் வராத நிலையில், விடுதி நண்பர்கள் அங்குள்ள விடுதி காப்பாளர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர்.

போராட்டம்

தேர்வின்போது மொபைல் போன் பயன்படுத்தியாக பிடிபட்ட பின்னர், அவர் இடைநீக்கம் செய்யப்படுவார் என கல்லூரி நிர்வாகம் மிரட்டியதாகவும், இதனாலேயே அவர் உயிரை மாய்த்துக்கொண்டதாகவும் குற்றம் சாட்டி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இதற்கு பொறுப்பேற்று மும்பை ஐஐடி இயக்குநர் ஷிரீஷ் கேதாரே பதவி விலக வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.

பெற்றோர் குற்றச்சாட்டு

இதனிடையே மாணவரின் பெற்றோர், கல்லூரியில் தங்கள் மகன் சாதிய ரீதியான துன்புறுத்தல்களை எதிர்கொண்டதாக, குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மூத்த பேராசிரியர் மற்றும் கல்லூரி அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் மும்பை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT