ஒடிசா அருகே சரக்குக் கப்பல் மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன் தினம் ஒடிசா கடற்கரையிலிருந்து சிங்கப்பூருக்கு இரும்புத் தாதை சுமந்து கொண்டு பனாமா நாட்டு கொடியுடன் எம்.வி. ஓஷன் வின்னர் என்ற சரக்கு கப்பல் புறப்பட்டது.
நேற்று, ஒடிசாவின் பாரதீப் கடற்கரையிலிருந்து சுமார் 240 நாட்டிக்கல் மைல் தொலைவில் சென்றபோது வங்கக்கடலில் கப்பல் மூழ்கியது.
தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியக் கடலோரக் காவல் படை மற்றும் இந்தியக் கடற்படை ஆகியவை இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இக்கப்பலில் 20 சீனா, 3 மியான்மர் மற்றும் 1 வங்கதேசத்தைச் சேர்ந்த மாலுமி என மொத்தம் 24 பணியாளர்கள் இருந்தனர். கடலில் மிதந்த 2 மாலுமிகள் இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
எஞ்சிய 22 பணியாளர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அண்மையில் செல்லும் பிற கப்பல்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, தேடுதல் பணிக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.