இந்தியா

Car | டிக்கியில் குழந்தைகள்... அதிவேகத்தில் சீறி பாய்ந்த கார் -வீடியோ வைரலானதும் காவல் துறை செய்த சம்பவம்

குழந்தைகள் தங்கள் சமநிலையை தக்கவைக்க போராடினர்.

ஐதராபாத்தின் வெளிவட்டச் சாலையில் (ORR) ஓடும் காரின் திறந்த டிக்கியில் மூன்று குழந்தைகள் பயணம் செய்யும் காணொளி ஒன்று வைரலாகி, பொதுமக்களிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரியவர்கள் வாகனத்திற்குள் பாதுகாப்பாக அமர்ந்திருக்க, அதிவேகத்தில் வாகனங்கள் கடந்து சென்றபோது, ​​குழந்தைகள் தங்கள் சமநிலையை தக்கவைக்க போராடினர்.

"ஓ.ஆர்.ஆர். ஐதராபாத் திகில். காரின் டிக்கியில் உள்ள குழந்தைகளுடன், ஒரு குடும்பம் மணிக்கு 100 கி.மீ-க்கும் அதிகமான வேகத்தில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பயணிக்கிறது," என்று குணால் சிங் என்ற பயனர் அந்த வீடியோவிற்கு தலைப்பிட்டிருந்தார்.

தற்போது வைரலாகி வரும் அந்த காணொளியில், திறந்த டிக்கியுடன் வேகமாக செல்லும் காரையும், சாலையில் உருண்டு விழாமல் இருக்க குழந்தைகள் சாய்ந்து கொள்வதையும் கண்டு, அதைப் பதிவு செய்யும் நபர் நம்பமுடியாமல் பெருமூச்சு விடுவது கேட்கிறது.

வைரலான அந்த வீடியோ தொடர்பாக, சைபராபாத் போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் வாகன உரிமையாளர் அங்கு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"விதிமீறலுக்காக அந்த வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் உரிமையாளர் தொடர்பில் இல்லாததால், நாங்கள் தொலைபேசி வாயிலாக ஆலோசனை வழங்கி, இதுபோன்ற அபாயகரமான மற்றும் ஆபத்தான பழக்கங்களையோ அல்லது எதிர்காலத்தில் போக்குவரத்து விதிகளை மீறுவதையோ தவிர்க்குமாறு கடுமையாக அறிவுறுத்தினோம்," என்று சைபராபாத் போக்குவரத்து காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.