இந்தியா

மார்க்கெட்டில் கார் புகுந்து இளம்பெண் பலி- போதையில் இருந்த டிரைவரை மடக்கி பிடித்த பொதுமக்கள்

பொதுமக்கள் மீது காரை மோதியதும் டிரைவர் அங்கிருந்து காரை பின்நோக்கி நகர்த்தி வேகமாக தப்பி செல்ல முயன்றார்.விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து டிரைவரை கைது செய்தனர்.

காஜியாபாத்:

கிழக்கு டெல்லி காஜிப்பூரில் புத் பஜார் என்ற மார்க்கெட் உள்ளது. இங்கு எப்போதும் பொதுமக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். நேற்று இரவு 9.30 மணியளவில் பொதுமக்கள் மார்க்கெட்டில் பொருட்களை வாங்கிக்கொண்டு இருந்தனர்.

அப்போது திடீரென ஒரு கார் கூட்டத்தில் வேகமாக புகுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் காஜியாபாத்தை சேர்ந்த சீதா தேவி என்ற 22 வயது இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 5 பெண்கள் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பொதுமக்கள் மீது காரை மோதியதும் டிரைவர் அங்கிருந்து காரை பின்நோக்கி நகர்த்தி வேகமாக தப்பி செல்ல முயன்றார். ஆனால் பொதுமக்கள் காரை சிறிது தூரம் விரட்டி பிடித்து டிரைவரை மடக்கி பிடித்தனர். விபத்து ஏற்படுத்திய டிரைவர் மது போதையில் இருந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து டிரைவரை கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT