எத்தனால் பெட்ரோலால் பழுதடைந்த காருக்குப் பதிலாக புதுக்காரை வாடிக்கையாளர் ஒருவருக்கு வழங்க உத்தரவிட்ட ராய்ப்பூர் நுகர்வோர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, மாருதி சுசுகி நிறுவனம் மேல்முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் ரூ.20 லட்சத்திற்கு, ராய்ப்பூரைச் சேர்ந்த சிறுநீரக மருத்துவர் ஒருவர் மாருதி கிராண்ட் விட்டாரா ஆல்ஃபா இன்டெலிஜென்ட் எலக்ட்ரிக் ஸ்ட்ராங் ஹைப்ரிட் காரை வாங்கியுள்ளார்.
சுமார் 21,913 கி.மீ. ஓடியபிறகு, நவம்பர் மாதமே, இன்ஜின் கோளாறாகி ஓடாமல் பாதியிலேயே நின்றுள்ளது. இதனையடுத்து ஷோரூம் சர்வீஸ்க்கு காரை விட்டுள்ளார். அங்கு கலப்பட பெட்ரோலே காரணம் எனக்கூறி, பெட்ரோல் டேங்கை சுத்தம் செய்து தந்துள்ளனர். இருப்பினும் அடுத்தடுத்து தொடர்ந்து கார் பழுதாகி வந்துள்ளது.
மாருதி நிறுவனமும் வாரண்டி காலம் முடியும்வரை பழுதுபார்த்துள்ளது. ஆனால் பழுதுபார்க்கும் செலவு ரூ.5 லட்சத்தை எட்டியநிலையில், இதற்கு மேல் சர்வீஸ் செய்யமுடியாது என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் காருக்கு 2029 ஆம் ஆண்டு வரை அல்லது 1 லட்சம் கி.மீ. ஓடும் வரை சர்வீஸ் செய்து தரப்படும் என கார் நிறுவனம் தரப்பில் உத்தரவாதம் தரப்பட்டதாக மருத்துவர், நிறுவனத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்படி சர்வீஸ் செய்யமுடியாதெனில் காரை மாற்றித் தரவேண்டும் அல்லது முழுப் பணத்தையும் தருமாறும், அதற்கு நஷ்ட ஈடும் கொடுக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து இதுதொடர்பாக மருத்துவர் ராய்ப்பூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர, நீதிமன்றம் அவருக்கு புதுக்காரையும், கூடுதலாக நஷ்ட ஈடும் வழங்க உத்தரவிட்டது. இந்நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
கார் என்ஜின் எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு ஏற்றதல்ல என்பதை நிறுவனம் தெளிவுப்படுத்த தவறியது என்றும், 2023ல் தயாரிக்கப்பட்ட கார், 2024ல் அதே நிர்ணயம் செய்யப்பட்ட விலைக்கே விற்பனை செய்யப்பட்டது. அதாவது, 17 மாதங்கள் பழமையான காரை புதிய வாகனத்தின் விலைக்கே விற்றது, உத்தரவாதம் அளித்தவாறு காரை மாற்றித் தராமல் இருந்தது உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு நீதிமன்றம் புதுகாரை வழங்க உத்தரவிட்டது.
கிராண்ட் விட்டாரா காரைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, அதே மாடலில் E20 எரிபொருளை தாங்கும் திறன் கொண்ட புதிய வாகனத்தை 45 நாட்களுக்குள் வழங்குமாறு மாருதி சுசுகிக்கு உத்தரவிட்டது.
அவ்வாறு செய்யத் தவறினால் கார் வாங்க அவர் செய்த மொத்த செலவான ரூ.20,50,494-ஐ திருப்பி செலுத்த வேண்டும். மேலும் மன உளைச்சலுக்கான இழப்பீடாக ரூ. 1 லட்சமும், வழக்குச் செலவாக ரூ. 10,000-மும் செலுத்த வேண்டும். அதுவும் 45 நாட்களுக்குகள் இந்த தொகை செலுத்தப்படாவிட்டால், ஆண்டுக்கு 7% வட்டி விதிக்கப்படும் என தெரிவித்தது.
இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது மாருதி நிறுவனம். அந்த வாகனம் எத்தனால் பெட்ரோலுக்கு உகந்ததுதான் என்றும், பெட்ரோலில்தான் கலப்படம் இருந்தது என்றும், அதற்கான ஆதாரமும் உள்ளது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சட்டப்படி, ஆட்சேபிக்கப்பட்ட இந்த உத்தரவை உரிய உயர் மன்றத்தில் எதிர்த்து மாருதி சுசுகி தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என தெரிவித்துள்ளது.