தெலுங்கானா மாநிலம், ராஜண்ணா சிர்சில்லாவை சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ் (வயது 40). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ஸ்வேதா. தம்பதிக்கு கிருஷ்ண சந்திரா (13), மாதவ் (10) என 2 மகன்கள் இருந்தனர்.
ஸ்வேதாவின் சகோதரர் சனத் நகரை சேர்ந்த சிவகுமார் (37).இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ராஜேஸ்வரி என்கிற லாசியா ( 35). தம்பதிக்கு ரிஷிதா (7) என்ற மகள் இருந்தார்.
தொடர் விடுமுறை என்பதால் கோவில்களில் தரிசனம் செய்வதற்காக ஸ்ரீனிவாஸ் குடும்பத்தினர் நேற்று முன்தினம் காரில் சிவகுமார் வீட்டிற்கு வந்தனர். 2 குடும்பத்தை சேர்ந்த 7 பேரும் ஒரே காரில் யாதகிரி குட்டா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். பின்னர் ஸ்வர்ணகிரியில் உள்ள கோவிலில் தரிசனம் செய்தனர்.
நேற்று சிலுகுருவில் உள்ள ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக காரில் புறப்பட்டு வந்து கொண்டு இருந்தனர். ஐதராபாத் புறநகர் பகுதியான தோண்டுப்பள்ளி சாலையில் கார் வந்தது. அப்போது சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரியின் பின்புறத்தில் கார் பயங்கர வேகத்தில் மோதியது.
இந்த விபத்தில் கார் முழுவதும் நொறுங்கியது. காரின் இடிபாடுகளில் சிக்கி சிவகுமார், ராஜேஸ்வரி, ரிஷிதா, ஸ்ரீனிவாஸ் அவரது மகன்கள் கிருஷ்ண சந்திரா, மாதவ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த ஷம்ஷாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளை அகற்றி காரில் இருந்தவர்களை மீட்டனர்.
காரில் இறந்து கிடந்தவர்களையும் மற்றும் படுகாயம் அடைந்த ஸ்வேதாவை மீட்டனர். ஸ்வேதா உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.