நாட்டில் தேங்கி நிலுவையில் இருக்கும் நீதிமன்ற வழக்குகளின் எண்ணிக்கை 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை போல இப்போது இல்லை என்று இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்தார்.
மேலும், வழக்குகளை விரைவாக முடிப்பதற்காக தொழில்நுட்பத்தின் மூலம் வடிவமைக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் மிகச் சிறந்த பலன்களை அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த்-இடம், நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர், “தேங்கியிருக்கும் வழக்குகளுக்கு பல காரணங்கள் உள்ளன; அவை படிப்படியாக ஒரு திட்டமிட்ட முறையில் தீர்க்கப்பட்டு வருகின்றன.
நாட்டில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை, 10 முதல் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப்போல் இப்போது இல்லை. தொழில்நுட்பத்தின் மூலம் வழக்குகளை விரைவாகத் தீர்ப்பதற்காக நாங்கள் ஏராளமான திட்டங்களை வகுத்துள்ளோம், அவை மிகவும் நல்ல பலன்களை அளித்துள்ளன” என்று கூறினார்.
மேலும், “பெண்கள் பதிவு செய்யும் பல துன்புறுத்தல் வழக்குகள் போலியானவை என நிரூபிக்கப்படுவது குறித்த விஷயத்தில் பொதுவான கருத்தைக் கூற முடியாது. ஒவ்வொரு வழக்கும் அதன் குறிப்பிட்ட உண்மைகளைப் பொறுத்தது.
நீதிபதிகள் நியமனத்திற்காக உச்ச நீதிமன்ற கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை மத்திய அரசு மீண்டும் மீண்டும் திருப்பி அனுப்புவது குறித்து பத்திரிக்கையாளர்கள் இங்கே பேசக்கூடாது.
இது சட்ட சேவைகள் ஆணையத்தின் ஒரு நிகழ்ச்சி" என்று கூறினார்.
முன்னதாக, தலைமை நீதிபதி இங்கு நடைபெற்ற தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் மேற்கு மண்டல மாநாட்டில் உரையாற்றினார்.
மாநாட்டின் தொடக்க அமர்வில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் மற்றும் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் கலந்துகொண்டனர்.