செல்போன் மூலமாக அரங்கேறும் போலி அழைப்புகள் மற்றும் ஆன்லைன் பண மோசடிகளைத் தடுக்கும் பொருட்டு, மத்திய தொலைத்தொடர்புத் துறை அதிரடியான புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
இதன்படி, வருகிற நவம்பர் 1-ஆம் தேதி முதல் மொபைல் போன்களில் அழைப்பவர்களின் அதிகாரப்பூர்வ அசல் பெயர் திரையில் தோன்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தற்போது மொபைல் போன்களில் யார் அழைக்கிறார்கள் என்பதை அறிய 'ட்ரூ காலர்' போன்ற செயலிகளைப் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், இதில் சம்பந்தப்பட்ட நபர் தனது பெயரை எப்படி மாற்றிப் பதிவு செய்திருந்தாலும், அந்தப் பெயரே திரையில் காட்டும் குறைபாடு உள்ளது. ஒருவேளை பெயரைப் பதிவு செய்யாவிட்டால் வெறும் எண்கள் மட்டுமே காட்டும். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுதான் பல ஆன்லைன் மோசடி கும்பல்கள் மக்களை ஏமாற்றி வந்தன.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மத்திய அரசு சி.என்.ஏ.பி. என்ற அதிநவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தச் புதிய அம்சம் எந்தவொரு வெளிச் செயலியையும் சார்ந்து இருக்காது. இது நேரடியாக ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் நெட்வொர்க்குகளோடு இணைக்கப்பட்ட ஓர் அமைப்பாகும்.
வாடிக்கையாளர்கள் தங்களின் கே.ஒய்.சி விவரங்களைச் சமர்ப்பித்து சிம் கார்டு வாங்கும் போது, ஆதார் கார்டு போன்ற அதிகாரப்பூர்வ ஆவணங்களில் என்ன பெயர் உள்ளதோ, அந்த அசல் பெயர் மட்டுமே இனி அழைப்பின் போது திரையில் தோன்றும்.
மற்றவர்கள் தங்களது போனில் என்ன பெயர் பதிவு செய்து வைத்திருந்தாலும் அல்லது மோசடி நபர்கள் தங்களை அதிகாரிகளாக மாற்றிக் காட்டப் போலிப் பெயர்களைப் பயன்படுத்தினாலும், இனி அவை வேலை செய்யாது. அரசாங்க ஆவணத்தில் உள்ள உண்மையான பெயர் மட்டுமே அச்சு அசலாகத் திரையில் காட்டும்.
இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் தேவையில்லாத விளம்பர அழைப்புகள் மற்றும் மிரட்டல் விடுக்கப்படும் போலி அழைப்புகளை வாடிக்கையாளர்கள் எளிதாகப் புறக்கணிக்க முடியும்.
எந்த எண் அறிமுகமில்லாத எண்ணாக இருந்தாலும், அழைப்பவரின் அசல் அடையாளத்தை உடனே தெரிந்து கொள்ள முடியும் என்பதால் ஆன்லைன் நிதி மோசடிகள் பெருமளவு குறையும் என மத்திய அரசு நம்புகிறது.
இந்த புதிய பாதுகாப்பு வசதியானது முதற்கட்டமாக 4G மற்றும் 5G சிம் கார்டுகள் மற்றும் அலைவரிசைகளைக் கொண்ட மொபைல் போன்களில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த கட்டங்களாக 2G மற்றும் 3G நெட்வொர்க் பயன்படுத்தும் பழைய மொபைல் போன்களிலும் இந்த வசதி படிப்படியாக அமல்படுத்தப்படும் என மத்திய தொலைத்தொடர்புத் துறை அந்த உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளது.
மத்திய அரசின் இந்த அதிரடி உத்தரவு மொபைல் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.