இந்தியாவில் மொத்தம் 6 தொகுதிகளுக்கு அக்.6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மதுராந்தகம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சத்தியபாமா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததை அடுத்து இந்தத் தொகுதிகள் காலியாகின.
தமிழ்நாட்டில் மொத்தம் 7 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், 2 தொகுதிகளுக்கு மட்டும் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 9 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அந்த வழக்குகளின் இறுதி தீர்ப்பு வரும் வரை அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது எனத் தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டைத் தொடர்ந்து அசாம், புதுச்சேரி, மேற்குவங்கம் மாநிலங்களில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி, மேற்குவங்கத்தின் நந்திகிராம், ரெஜிநகர், அசாமின் நாகோன் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆறு தொகுதிகளுக்கும் வேட்புமனுத்தாக்கல் செப்.9 தொடங்கும் எனவும், வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் செப்.16 எனவும், வேட்புமனுக்களை பரிசீலனை செய்வதற்கான கடைசி நாள் செப்.17 என்றும், வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி செப்.19 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு அக்.6ம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை அக்.9 நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.