இந்தியா

பள்ளிக்கூடம் செல்ல கலெக்டரிடம் சைக்கிள் கேட்ட சிறுமி: வைரலான வீடியோ

ஒரு காலில் பள்ளிக்கு நடந்து செல்லும் 7 வயது ராகினிக்கு தேவையான நிதியுதவிகளை மாவட்ட நிர்வாகம் வழங்கியது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ராணிபூர் என்ற கிராமத்தில் கால் ஊனமாக உள்ள சிறுமி ஒருவர், தனது வறுமையின் நிலையிலும், உடல் குறைகளை பொருட்படுத்தாமல், அந்த கிராமத்தில் உள்ள பள்ளிக்கு ஒரு காலில் நடந்து சென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் பல்லியாவில் உள்ள ராணிபூர் என்ற கிராமத்தில் ராகினி என்ற ஏழு வயது சிறுமி பிறக்கும் போது மற்ற குழந்தைகளை போல உடல் ஆரோக்கியத்துடன் பிறந்துள்ளார்.

7 வயது சிறுமி ராகினி

இதையடுத்து அந்த சிறுமி ஆறு மாத குழந்தையாக இருக்கும்போது, ஒரு விபத்தில் சிறுமியின் கால் கடுமையாக சேதமடைந்து நடக்க முடியாமல் போனது. அந்த சிறுமியின் குடும்பத்தினர், அவரை பல இடங்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

ஆனால் ராகினியின் தந்தை தினக்கூலியாக வேலை பார்த்து வருவதாலும், பொருளாதார நெருக்கடி காரணமாகவும் சிறுமிக்கு உரிய மருத்துவ சிகிச்சையை அவரின் பெற்றோர்களால் வழங்க முடியாமல் போனது.

ராகினி தனது கிராமத்தில் உள்ள மற்ற குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை பார்த்து, தானும் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று விரும்பியுள்ளார். தனது உடலில் குறைபாடுகள் இருந்தபோதிலும், திகோடா தொடக்கப் பள்ளியில் அந்த சிறுமி சேர்ந்து படிக்க தொடங்கினார்.

தனது வீட்டின் 400 மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு, ராகினியால் ஒரு காலில் நடந்து செல்வது மிகவும் சவாலனதாக இருந்தது.

அந்த சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக இருந்ததால், அந்த சிறுமியால் ஒரு காலில் நடந்து செல்வது மேலும் கடினமானதாக இருந்தது.

மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

இதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் தனக்கு ஒரு மிதிவண்டி தருமாறு ராகினி வீடியோ காட்சி மூலம் கோரிக்கை வைத்தார். சிறுமி வெளியிட்ட அந்த வீடியோவில், ”மாவட்ட ஆட்சியர் மாமா, என் கால்களில் ஒன்று மிகவும் சேதமடைந்துள்ளது.

தயவுசெய்து எனக்கு ஒரு மிதிவண்டியை வாங்கி தாருங்கள். நான் தினமும் பள்ளிக்கு படிக்க வருவேன்” என்று கூறி ஒரு வீடியோவை வெளியிட்டார்.

இந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி கவனம் பெற்றதை தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங், சிறுமியின் குடும்பத்திற்கு ரூபாய் 26,500 நிதியுதவி வழங்கினார்.

இதையடுத்து உள்ளூர் கட்சியினரும் சிறுமிக்கு ஒரு மூன்றுசக்கர மிதிவண்டியை வாங்கி கொடுத்தனர். இதற்கிடையில் மாவட்ட ஆட்சியர் ராகினியின் வீட்டிற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து சிறுமிக்கு புத்தகங்கள், பள்ளி பை, பொம்மை மற்றும் சாக்லேட்டுகளை வழங்கினார். மேலும் ராகினிக்கு தேவையான மருத்துவ உதவிகளையும் ஏற்பாடு செய்து தருவதாக, ஆட்சியர் உறுதியளித்தார்.

மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறுமியின் கிராமத்திற்கு தேவையான சாலை வசதியும் சீரமைக்கப்பட்டது. மேலும் சிறுமியின் வீட்டிற்கு ஒரு கழிப்பறை கட்டுவதற்கு, அரசு நலத்திட்டத்தின் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT