இந்தியா

அஜித் தோவல் தலைமையில் பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு!

18வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு முன்னோட்டமாக இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு டெல்லியில் ஜூன் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இதற்கு தலைமை தாங்குகிறார் என்று வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் இந்தியாவில் நடைபெறவுள்ள 18வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு முன்னோட்டமாக பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, ரஷிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் செர்ஜி ஷோய்கு, ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் துணை செயலாளர் நெஜாமிபூர் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

கருப்பொருள்

இந்த இரண்டு நாள் மாநாட்டில் தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி நாடுகளின் தேசிய பாதுகாப்பில் ஏற்படுத்தி வரும் தாக்கங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

உலகளவில் அதிகரித்து வரும் சைபர் தாக்குதல்களை தடுப்பது மற்றும் நாடுகளின் டிஜிட்டல் உள்கட்டமைப்புகளை பாதுகாப்பது குறித்து இதில் பேசப்படும்.

செயற்கை நுண்ணறிவு தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கும் உளவுத் தகவல்களைப் பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதற்கும் புதிய வழிமுறைகளை உருவாக்க இந்த மாநாட்டில் தளமாக அமையும் என எதிர்பார்கப்படுகிறது.

பிரிக்ஸ்

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் என 11 நாடுகளை கொண்ட கூட்டமைப்பு பிரிக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.