பீகார் மாநில அரசு நடத்தும் பிபிஎஸ்சி தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் தலைநகர் பாட்னாவில் பேரணி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடந்து முடிந்த 70வது பிபிஎஸ்சி தேர்வில் முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு நடந்ததாக குற்றம்சாட்டி மாணவர்கள் காந்தி மைதானத்தில் இருந்து முதல்வர் இல்லம் நோக்கி இன்று தங்கள் பேரணியை தொடங்கினர்.
செல்லும் வழி நெடுகிலும் கோஷங்களை எழுப்பியவண்ணம் சென்ற அவர்கள் போலீசாரால் போடப்பட்ட தடுப்புகளை தாண்டி செல்ல முயன்றனர்.
மாணவர்ளை தடுக்க அங்கு குவிக்கப்பட்ட போலீசார் மற்றும் மத்திய படையினர் முயன்று வருகின்றனர். மாணவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து போலீசார் தடுக்க முயன்றபோதும் அவர்கள் முதலமைச்சர் இல்லத்தை நெருங்கியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
முன்னதாக நேற்று போராட்டக்குழு மாணவர்களின் பிரதிநிதிகளிடம் பீகார் என்டிஏ அரசு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அதில் தீர்வு எட்டப்படாததால் இன்று பேரணி நடத்தப்பட்டது.
மாணவர் தலைவர் சவுரவ் குமார் அரசுடனான பேச்சுவார்த்தை நேர்மறையாக அமைந்ததாகவும் இருப்பினும் தங்கள் கோரிக்கை நிறைவடையும் வரை தங்கள் எதிர்ப்பு செயல்பாடுகளை தொடரப்போவதாகவும் தெரிவித்தார்.
"நாங்கள் பீகார் முதல்வர் சாம்ராட் சவுத்ரியை சந்திக்க விரும்புகிறோம். இதுவரை எங்களிடம் கீழ்நிலை அதிகாரிகளே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். முதல்வரை சந்தித்தால் தான் தீர்வுகிடைக்கும் .
எங்களுக்கு முதல்வரை சந்திக்க வாய்ப்பளிக்கப்படும் என தெரிவித்தால் நாங்கள் போராட்டத்தை கைவிட தயார்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் " எங்களின் முதன்மை கோரிக்கை முதலமைச்சரை சந்திப்பதுதான். அது சாத்தியப்படவில்லை என்றால் இரண்டாவது பட்சமாக நாங்கள் கல்வி அமைச்சரை சந்திக்க ஒப்புக்கொள்கிறோம்.
ஆனால் இவர்கள் இருவரை தவிர வேறு யாரையும் நாங்கள் சந்திக்க தயாராக இல்லை" எனவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே மாணவர்களின் குறைகளை கேட்டறிய, "வித்யார்தி சாயோக் சிவிர்" (மாணவர் உதவி முகாம்) மாதந்தோறும் நடத்தப்படும் என பீகார் அரசு அறிவித்துள்ளது.
கல்வி நிலையங்களில் ஒவ்வொரு மாதமும் 4 வது செவ்வாய்கிழமை இந்த முகாம்கள் நடத்தப்படும் என்றும் நேரடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மாணவர்களின் குறைகள் சென்று சேரும் என்றும் முதலமைச்சர் சவுத்ரி தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
"மாணவர்கள் தங்கள் குறைகளை பதிவு செய்ய ஒரு இணைய போர்டல் உருவாக்கப்படும். அதில் மாணவர்கள் புகார்களை பதிவு செய்து அது எந்த கட்டத்தில் உள்ளது என்பதை அறியலாம். மேலும் 1100 என்ற உதவி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.