லக்னோவில் இருந்து இன்று காலை 10.45 மணியளவில் இண்டியோ விமானம் ஒன்று டெல்லிக்கு புறப்பட இருந்தது. விமானத்தில் சுமார் 180 பயணிகள் பயணிக்க இருந்தனர்.
இந்நிலையில், விமானம் புறப்படுவதற்கு சற்று நேரம் முன்பு, விமானத்தின் கழிப்பறைக்குள் ஒரு மெல்லிய காகிதத்தில் கையால் எழுதப்பட்ட குறிப்பு ஒன்றை விமான ஊழியர்கள் கண்டெடுத்தனர். அந்த குறிப்பில், விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக எழுதப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம் (ATC) மற்றும் பிற பாதுகாப்பு முகமைகளுக்கும் உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு இணங்க விமானத்தை பாதுகாப்புப் பணியாளர்கள் முழுமையாக ஆய்வு செய்தனர்.
முன்னதாக அனைத்துப் பயணிகளும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தேடுதல் விசாரணைக்குப் பிறகு வெடிகுண்டு மிரட்டல் முற்றிலும் பொய்யானது என அதிகாரிகள் கண்டறிந்தனர். அதன் காரணமாக விமானம் புறப்பட தாமதமானது.
இதுகுறித்து விசாரணையைத் தொடங்கியதோடு, மிரட்டல் கடிதத்தை எழுதி வைத்துச் சென்ற நபரை அடையாளம் காணவும் அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.