மும்பையின் மையப்பகுதியும், மிகவும் பரபரப்பானதுமான சத்ரபதி சிவாஜி மஹராஜ் டெர்மினஸ் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் அவசர உதவி எண்களான '112' மூலம் காவல் துறைக்கு இந்த வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த மிரட்டல் தகவலைத் தொடர்ந்து, உடனடியாக ரெயில்வே பாதுகாப்புப் படையினரும் மும்பை போலீசாரும் அதிரடியாக சோதனை நடத்தினர்.
தகவல் கிடைத்த அடுத்த சில நிமிடங்களில் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு கண்டறிந்து செயலிழக்கும் நிபுணர்கள் சி.எஸ்.எம்.டி. ரயில் நிலையத்திற்கு விரைந்தனர். பாதுகாப்புப் படை வீரர்களுடன் இணைந்து ஒட்டுமொத்த ரெயில் நிலைய வளாகம், நடைமேடைகள் மற்றும் ரெயில்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த தீவிர சோதனையின் முடிவில் சந்தேகத்திற்கிடமான பொருட்களோ அல்லது வெடிபொருட்களோ எதுவும் கிடைக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, இந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டது. எனினும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த மர்ம நபரை அடையாளம் காணும் பணியில் மும்பை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து காவல் துறையின் புலனாய்வுப் பிரிவு வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.