B.K. Hariprasad, Siddaramaiah. 
இந்தியா

பி.கே. ஹரிபிரசாத் மாநில தலைவராக நியமனம்- சித்தராமையா நேரில் வாழ்த்து!

சமூக நீதி, மதச்சார்பின்மை மற்றும் நலிவடைந்த பிரிவினரின் முன்னேற்றத்திற்கான மத்திய தலைமையின் தெளிவான செய்தி என ஹரிபிரசாத் பெருமிதம்.

கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் (KPCC) புதிய தலைவராக மூத்த காங்கிரஸ் தலைவர் பி.கே. ஹரிபிரசாத் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக டி.கே. சிவக்குமார் லோக் பவனில் முறைப்படி பதவியேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை பி.கே. ஹரிபிரசாத்திடம் கட்சித் தலைமை ஒப்படைத்தது.

இந்த நியமனத்தை அடுத்து, பெங்களூரில் உள்ள 'காவேரி நிவாஸ்' இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவை நேரில் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பு குறித்து சித்தராமையா தனது எக்ஸ் தளத்தில், "எனது அன்பிற்குரிய நண்பர் பி.கே. ஹரிபிரசாத் கேபிசிசி தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு என்னை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

இந்தத் தருணத்தில், அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், அவரது புதிய பொறுப்புகள் சிறக்க நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்ட அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா மற்றும் டாப் லெவல் பதவிகள் இறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உள்கட்சி நிர்வாகத்தை வலுப்படுத்த இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏஐசிசி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட மத்திய தலைமைக்குத் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

இந்த நியமனம் என்பது ஒரு தனிநபருக்கு வழங்கப்பட்ட பதவி மட்டுமல்ல. இது காங்கிரஸின் அடிப்படைக் கொள்கைகளான சமூக நீதி, மதச்சார்பின்மை, ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நலிவடைந்த பிரிவினரின் முன்னேற்றத்திற்கான ஒரு தெளிவான செய்தி என்றும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்த நியமனம் குறித்துப் பேசிய கர்நாடக கேபினட் அமைச்சர் பிரியங்க் கார்கே, "பி.கே. ஹரிபிரசாத் தெளிவான கொள்கைகளைக் கொண்ட ஒரு தீவிரமான காங்கிரஸ் தலைவர்.

கட்சி எப்போதும் அவருக்குப் பின்னால் துணையாக நிற்கும். அமைச்சரவை துறைகள் குறித்த முடிவை முதலமைச்சரே எடுப்பார்" என்று கூறினார்.

மேலும், நாட்டின் தங்கம் விற்கப்படும் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்தும் அவர் தனது கவலையை வெளிப்படுத்தினார்.

கர்நாடகாவில் டி.கே. சிவக்குமார் முதலமைச்சராகவும், ஜி. பரமேஸ்வரா துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ள சூழலில், கட்சியின் மாநிலப் பொறுப்பு பி.கே. ஹரிபிரசாத்திடம் வழங்கப்பட்டிருப்பது கர்நாடக காங்கிரஸ் அமைப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.