இந்தியா

பீகாரில் தகர்ந்த பாஜக கோட்டை... மூன்று மாநில இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானது!

இந்த தொகுதிகளுக்கு முன்னதாகவே காலியான தமிழ்நாட்டில் சில தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.

ராஜினாமா, தகுதி நீக்கம், மரணம் உள்ளிட்ட காரணங்களால் பீகார், ம.பி., குஜராத் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு சட்டமன்ற தொகுதி காலியானது. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினின் ராஜினாமாவைத் தொடர்ந்து பீகாரின் பாங்கிபூர் சட்டமன்ற தொகுதி காலியானது.

மத்தியப் பிரதேசத்தில், ராஜேந்திர பாரதி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ததியா தொகுதி காலியானது. குஜராத்தில், யோகேஷ்பாய் நரந்தாஸ் படேலின் மரணத்தால் மஞ்சள்பூர் காலியானது.

இந்த மூன்று தொகுதிகளுக்கும் ஜூலை 30ம் தேதி வாக்குப்பதிவும், இன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது.

இந்நிலையில் பீகாரில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோரின் ஜான் சுராஜ் கட்சியும், குஜராத்தில் பாஜகவும், ம.பி.யில் காங்கிரஸும் வெற்றிப் பெற்றுள்ளன.

பிரசாந்த் கிஷோர் வெற்றி

பீகாரில் பாஜக வேட்பாளர் நீரஜ்குமாரை 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார் பிரசாந்த் கிஷோர். இது பாஜகவிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

காரணம் கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் பாங்கிபூர் தொகுதி பாஜகவின் கோட்டையாக இருந்து வந்தது. இந்த இடைத்தேர்தலில் அந்தக் கோட்டை தகர்த்தப்பட்டு, பாஜகவிற்கு பெரும் இடியாக இறங்கியுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற பீகார் பொதுத்தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஒரு இடத்தைக் கூட வெல்லாமல் படுதோல்வி அடைந்திருந்தது. அதன் பின், பிரசாந்த் கிஷோர் நேரடியாகக் களம் கண்ட முதல் தேர்தல் இதுவாகும். இத்தேர்தலில் வென்றதன் மூலம் அவர் முதல்முறையாக பீகார் சட்டமன்றத்திற்குள் நுழைகிறார்.

இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, பீகாரின் பாட்னாவில் உள்ள ஜன் சுராஜ் கட்சித் தலைமையகத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கிப் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குஜராத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் என இருதரப்பு மட்டுமே போட்டியிட்ட நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் பிக்காபாய் ரபாரியை 30,630 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் சதேந்திர பாய் படேல் தோற்கடித்துள்ளார்.

ம.பி.யில் 6016 வாக்குகள் அதிகம்பெற்று பாஜக வேட்பாளர் அஷுதோஷ் திவாரியை தோற்கடித்துள்ளார் காங்கிரஸ் வேட்பாளர் கன்ஷ்யாம் சிங்.