அபிஜித் தீப்கே, சஞ்சய் ராவத் 
இந்தியா

அலுவலகங்களில் அபிஜித் தீப்கேவின் படத்தை வையுங்கள் - ஜென் இசட்களை கவரும் பாஜகவின் முயற்சி குறித்து சஞ்சய் ராவத்

அவர்கள் அவருக்குத்தான் நன்றி கடன் பட்டிருக்கிறார்கள்

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் ஜென் இசட் தலைமுறையினரைக் கவர எடுத்து வரும் பகிரத பிரயர்த்தனத்தை உத்தவ் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கேலி செய்துள்ளார்.

இந்தியாவில் ஜென் இசட் என்ற ஒரு இளம் தலைமுறை இருப்பதே கரப்பான்பூச்சி கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கேவால்தான் பாஜகவுக்கு தெரியவந்தது என்றும் அதற்கு அவர்கள் அவருக்குத்தான் நன்றி கடன் பட்டிருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாக்பூரில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் 'மந்தன் 4 யுவா' என்ற இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டதன் பின்னணியில் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத்,

"பாஜக தலைவர்கள் தங்கள் அலுவலகங்களில் அபிஜீத் தீப்கேயின் புகைப்படத்தைத் தொங்கவிட வேண்டும். ஏனென்றால், அவரால்தான் 'ஜென் இசட்' என்றொரு பிரிவு நாட்டிலிருப்பதே அவர்களுக்கு நினைவுக்கு வந்துள்ளது" என தெரிவித்தார்.

தேவேந்திர பட்னாவிஸ்

முன்னதாக நாக்பூர் இளைஞர் மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ராகுல் காந்தியின் நிகழ்ச்சிகள் வெறும் திட்டமிடப்பட்ட ஈவென்ட் மட்டுமே எனக் விமர்சித்துள்ளார்.

"எங்கள் நிகழ்வுக்கு வந்த இளைஞர்கள் அனைவரும் எந்தப் பலனுமின்றி தன்னிச்சையாக, இயல்பாக வந்தவர்கள். ஆனால் ராகுல் காந்தியின் நிகழ்ச்சிக்கு காசு கொடுத்து ஆட்களைக் கூட்டியதாகத் தகவல்கள் வருகின்றன

ராகுல் காந்தி மேடைகளில் பெண்கள் அதிகாரம் பெறுவது பற்றிப் பேசினாலும், வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைத் நாடாளுமன்றத்தில் எதிர்த்து வாக்களித்தவர்" என்று பட்னாவிஸ் சாடினார்.

இதற்கு பதிலளித்த சஞ்சய் ராவத், "ராகுல் காந்தியின் மாணவர் கூட்டம் காசு கொடுத்து கூட்டப்பட்டது என்றால், மகாராஷ்டிர சட்டசபை தேர்தலுக்கு முன்பாக 'முக்கியமந்திரி லட்கி பாகின்' திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்பட்டதை என்னவென்று சொல்வது?" எனக் கேள்வி எழுப்பினார்.

புனேவில் அண்மையில் ராகுல் காந்தி மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தியது குறிப்பிடத்தக்கது.