பா.ஜ.க. இந்த முறை ஆட்சியை விட்டு 'வெளியேறும்' என்றும், அதற்காக 2029 மக்களவை தேர்தல் வரை காத்திருக்கத் தேவையில்லை என்றும் திரிணமூல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி கூறினார்.
மேலும், தலைமை தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமாரை நீக்க வலியுறுத்திய அவர், வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் செயல்முறையை தேர்தல் ஆணையம் கையாண்ட விதம் மக்களின் வாக்குரிமையை பாதித்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
டெல்லியில் 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் மூன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தி, ஞானேஷ் குமார் மற்றும் வாக்காளர் பட்டியலின் 'சிறப்பு தீவிர திருத்த' (SIR) நடவடிக்கைக்கு எதிராக கூட்டு செயல் திட்டத்தை இறுதி செய்த மறுநாளே மம்தாவின் இந்த கருத்துகள் வெளியாகியுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் நாடு தழுவிய 'ஜனநாயகத்தை காப்போம்' நிகழ்ச்சிகள், அக்டோபர் 6 அன்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு மேற்கொள்ளும் பேரணி மற்றும் குடியரசு தலைவரை சந்திப்பதற்கான முயற்சிகள் ஆகியவை அடங்கும்.
"இம்முறை பா.ஜ.க. வெளியேறும் என்றும், அதற்காக நாம் 2029 வரை காத்திருக்க தேவையில்லை என்றும் நாங்கள் நம்புகிறோம். என்ன நடக்கிறது என்று பாருங்கள். ஆட்டம் தொடங்கிவிட்டது," என்று பானர்ஜி செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் உள்ளிட்ட உடனடி அரசியல் களத்தில் எதிர்க்கட்சிகள் கவனம் செலுத்தி, ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று மேற்கு வங்க முன்னாள் முதல்வரான அவர் கூறினார்.
"தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் அவர்கள் இடைத்தேர்தல்களில் பலவந்தமாக வெற்றி பெறலாம், ஆனால் அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது. முதலாவதாக, ஞானேஷ் குமார் வெளியேற வேண்டும்.
ஜனநாயகத்தையே காணாமல் போக செய்த அவரை 'வனிஷ் குமார்' (Vanish Kumar - காணாமல் போகச் செய்பவர்) என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டாவதாக, தேர்தல் முறையை சீரமைக்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்," என்று அவர் கூறினார்.
ஞானேஷ் குமாரின் பதவிக்காலத்தில் மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதாக கருதுவதாலேயே அவரை 'வனிஷ் குமார்' என்று அழைப்பதாக கூறிய பானர்ஜி, இறுதியில் அவரது கதியை மக்களே தீர்மானிப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.
"குடிமக்களின் வாக்குரிமையை பாதுகாக்கும் பொறுப்பை கொண்ட தலைமை தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார் குறித்து இப்போது பரவலான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
அவரது பதவிக்காலத்தில் மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதாக நான் கருதுவதால், ஆரம்பத்தில் இருந்தே அவரை நான் 'வனிஷ் குமார்' என்றுதான் அழைத்து வருகிறேன். ஆனால் இறுதியில், அவரது எதிர்காலத்தை தீர்மானிக்க நான் யார்? இந்திய மக்களே அதை தீர்மானிப்பார்கள். ஜனநாயகத்தில் நடந்திருக்கக்கூடாத ஒன்றுதான் இது," என்று அவர் கூறினார்.