நடந்து வரும் மாணவர் போராட்டத்தை வேண்டுமென்றே சீர்குலைப்பதற்காக வெளியிலிருந்து ஆட்கள் அனுப்பப்படுவதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், பாஜகத் தொண்டர்கள் போராட்டக்காரர்கள் மீது கல் எறிந்துவிட்டு, எங்கள் பெயரை கெடுக்க முயற்சிக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடத்தில் பேசிய அபிஜீத்,
“போராட்டத்தை வேண்டுமென்றே சீர்குலைப்பதற்காக வெளியிலிருந்து ஆட்கள் அனுப்பப்படுகிறார்கள். நாங்கள் ஒரு மாதமாக இங்கே அமர்ந்திருக்கிறோம். ஒரு மாதத்தில் இதுபோன்ற எந்தச் சம்பவமும் நடக்கவில்லை. ஆனால் இப்போது, இந்தப் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், மக்களை வேண்டுமென்றே தூண்டிவிடுவதற்காக பாஜகவால் வெளியிலிருந்து குண்டர்கள் அனுப்பப்படுகிறார்கள்.
கற்களை வீசுபவர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள். காவல்துறை லாரிகளில் கற்களை இங்கு கொண்டு வருகிறது. பாஜக குண்டர்கள் வந்து, கற்களை வீசி, பின்னர் எங்களின் பெயரை கெடுக்க முயற்சிக்கின்றனர்.
தடியடி பற்றி நான் ஏற்கனவே பேசியுள்ளேன். தடியடி நடத்திய காவல்துறையினரை நீதிமன்றம் முன் நிறுத்துவோம். இன்று எங்கள் போராட்டத்தின் 34வது நாள். சோனம் சாரின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது. இன்று அவரது உண்ணாவிரதப் போராட்டத்தின் 26வது நாள், எனவே எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.
இருப்பினும், சோனம் வாங்சுக் உயிர் இழப்பதை எங்களால் தாங்க முடியாது என்பதால், அவர் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளவேண்டும்.” என தெரிவித்தார்.
புதன்கிழமை (ஜூலை.22) மாலை நடந்த கல்வீச்சு சம்பவத்தில், உதவி காவல் ஆணையர் ஜெய் பிரகாஷ், கன்னாட் பிளேஸ் உதவி காவல் ஆணையர் விவேக் பகத், ஆய்வாளர் நந்த் கிஷோர் மற்றும் மேலும் நான்கு காவலர்கள் காயமடைந்ததாக டெல்லு காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து இந்த கல்வீச்சு தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும்நிலையில் அபிஜீத் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.