உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமையில் நேற்று நடைபெற்ற ரத யாத்திரையின்போது, பூக்களைத் தூவிச் சென்ற புல்டோசர் மோதி, உள்ளூர் பாஜக தலைவரின் 14 வயது மகன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
10ம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவன், தனது தங்கையை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக சென்றபோது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சிறுவனின் குடும்பத்தினரும், பாஜக தொண்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாதவ் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய சிறுவனின் தந்தை,
“என் மகன் சாலையைக் கடந்து கொண்டிருந்தபோது, ஒரு புல்டோசர் பின்னால் இருந்து பூக்களைத் தூவிக்கொண்டே வந்தது. அந்த புல்டோசர் அதிவேகமாக வந்து என் மகன் மீது மோதியபோது, அகிலேஷ் யாதவின் வாகன அணிவகுப்பு ஏற்கனவே சாலையைக் கடந்துவிட்டது.
இதில் என் மகன் சாலைத் தடுப்பின் மீது தூக்கி வீசப்பட்டான். இதில், அவனது தலையின் பின்பகுதியில் ஆழமான காயங்கள் ஏற்பட்டன.
நான் சம்பவ இடத்திற்கு விரைந்து என்ன நடந்தது எனக்கேட்டேன். அங்கிருந்த யாரும் சூழ்நிலையை என்னிடம் விளக்கவில்லை. இறுதியில் அவனின் முகத்தை என்னிடம் காட்டினர்.
உடல் முழுவதும் ரத்தம். அவனின் தலையின் பின்புறத்தை பார்த்தபோது, ஆழமான காயம் இருந்தது.
அகிலேஷ் யாதவின் வாகன அணிவகுப்பு ஒழுங்கற்ற முறையில் கையாளப்பட்டது. எந்தவொரு அரசியல் கட்சியும் இதுபோல நடந்துக்கொள்ளக்கூடாது. அரசியல் தலைவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து, சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இந்தச் சம்பவத்தில் எங்கள் மகன் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளான். இதை நான் படுகொலை என்றே சொல்வேன்; ஏனெனில், இது எக்காலத்திலும் நடந்திருக்கக் கூடாத ஒன்று.” என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், நிர்வாகம் உரிய ஏற்பாடுகளைச் செய்யத் தவறிவிட்டது என்றும், பாஜகவினரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; அவர்கள் யார் மீதும் பொய் வழக்குகளைச் சுமத்துவார்கள் என தெரிவித்துள்ளார்.
பின்னர் எக்ஸ் பக்கத்தில் இதுதொடர்பாக பதிவிட்ட அவர்.,
“இந்த விபத்தில் ஒரு அப்பாவி குழந்தை உயிரிழந்தது குறித்து அனைவரும் வருத்தமடைந்துள்ளோம். மேலும், அக்குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அக்குடும்பத்தினரைச் சந்தித்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு எனது குழுவினரிடம் கேட்டுக்கொண்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.