உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் பாஜக தலைவர் பிர்பால் சிங். இவரது மகன் அபினவ் சிங், வயதான மூத்த தம்பதியை தாக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இணையத்தில் பரவி வரும் அந்த சிசிடிவி வீடியோவில், முதியவரை மிரட்டும் அபினவ் அவரது கன்னத்தில் ஓங்கி அறைகிறார். இதனால் அந்த முதியவர் நிலை தடுமாறுகிறார்.
சத்தம் கேட்டு உள்ளிருந்து வந்த முதியவரின் மனைவியை அபினவ் மிரட்டும் காட்சிகளும் அந்த சிசிடிவி வீடியோவில் பதிவாகியுள்ளது. முதிய தம்பதிக்கும் அபினவுக்கும் என்ன பிரச்சனை என்ற தகவல் வெளியாகவில்லை.
கடந்த ஜூலை 23 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி கண்டனங்களை குவித்து வருகிறது. ஆனால் வீடியோ ஆதாரம் இருந்தும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆளும் கட்சித் தலைவரின் மகன் என்பதால் போலீசார் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டுவதாக நெட்டிசன்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.