பிரதமர் மோடி  
இந்தியா

பாஜக புதிய நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து.. ஜென் இசட் இளைஞர்களை கவர தனி குழு அமைப்பு

14 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இளைஞர்களை சென்றடையும் வகையில் பெரிய அளவிலான இயக்கத்தை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்குச் சென்ற பிரதமர் மோடி, கட்சியின் தலைவர் நிதின் நபின் தலைமையிலான புதிய நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

புதிய நிர்வாகிகள்

பாஜகவின் 65 உறுப்பினர்கள் கொண்ட புதிய நிர்வாகி பட்டியல் ஆகஸ்ட் 17 அன்று அறிவிக்கப்பட்டது. இதில் 51 புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் புதிய அமைப்பில் முக்கியப் பங்காற்ற உள்ளனர்.

இளைஞர்களை கவர குழு

14 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இளைஞர்களை சென்றடையும் வகையில் பெரிய அளவிலான இயக்கத்தை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில் ஜென் இசட் தலைமுறையினரை சென்றடைவதற்காக சிறப்பு 'ஜென் ஜி அவுட்ரீச் திட்டத்தை' பாஜக கையில் எடுத்துள்ளது.

இதற்காக தனித்துவமான உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின், தேசியப் பொதுச்செயலாளர்களான ஸ்மிருதி இரானி மற்றும் வினோத் தாவ்டே ஆகியோருக்கு இந்த குழுவில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், குஜராத் மாநில அமைச்சர் ஹர்ஷ் சங்கவி, சத்தீஸ்கர் மாநில அமைச்சர் ஓ.பி. சவுத்ரி உள்ளிட்ட பல முக்கிய இளம் தலைவர்களும் இந்த குழுவில் பணியாற்றவுள்ளனர்.

பாடம் கற்ற பாஜக

தேர்வு முறைகேடுகளை கண்டித்து டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையில் இளைஞர்கள், மாணவர்கள் நடத்திய போராட்டம், தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக வழிவகுத்தது.

இதைத்தொடர்ந்து சுதாரித்துக்கொண்ட பிரதமர் மோடி, இன்ஸ்டாகிராமில் மாணவர்களை கவரும் வேலையில் இறங்கியுள்ளார். கட்சியினரையும் இன்ஸ்டாகிராமை அதிகம் பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றியை தீர்மானிப்பதில் ஜென் இசட் முக்கிய காரணியாக மாறும் சூழலில், அவர்களை கவர பல்வேறு விஷயங்களை மத்திய பாஜக அரசு செய்து வருகிறது. பாஜகவின் சிந்தாந்த தலைமையாக கருதப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஜென் இசட் சந்திப்புகளை நடத்தி வருகிறது.