கர்நாடக மாநில முதல்வராக டி.கே. சிவக்குமார் கடந்த இரணடு மாதங்களுக்கு முன்னதாக பதவி ஏற்றுக் கொண்டார். ஆனால் கடந்த 20-ந்தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. 20 பேர் புதிதாக அமைச்சரவையில் இடம் பிடித்தனர்.
அமைச்சரவையில் இடம் கிடைக்காததால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் சிலர் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் பல்லாரி ஊரக காங்கிரஸ் எம்.எல்.ஏ. நாகேந்திராவை அமைச்சரவையில் சேர்த்ததற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
89 கோடி ரூபாய் வால்மீகி பழங்குடியினர் மேம்பாட்டு கார்ப்பரேசன் மோசடி குற்றச்சாட்டில் பி. நாகேந்திரா கைது செய்யப்பட்டு ஜாமினில் உள்ளார். அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தொடர்ந்து பதவியில் தொடர்ந்தால், போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக கர்நாடக மாநில மேலவை எதிர்கட்சி தலைவரான சாலவாடி நாராயணசாமி, அமைச்சரவையில் இருந்து நாகேந்திரா நீக்கப்படவில்லை என்றால், மாநிலம் தழுவிய போராட்டத்தை பாஜக நடத்தும். ஆகஸ்ட் 13-ந்தேதி தொடங்கும் சட்டசபை கூட்டத்தை சுமூகமாக நடத்த விடமாட்டோம் என்றார்.
அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, அப்பதவியை காங்கிரஸ் கட்சி ஏலம் விட்டது என்ற பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
நாகேந்திரா நாராயணசாமி ஊழல் குற்றச்சாட்டு எதிர்கொண்டு வருகிறார். அவர் ஜாமினில் உள்ளார். அவருக்கு அமைச்சரவை பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், காங்கிரஸ் ஊழலுக்கு ஆதரவாக உள்ளது என்று நிரூபனமாகியுள்ளது.
நாகேந்திரா ராஜினாமா செய்யும் வரைக்கும், நாங்கள் போராட்டத்தை நிறுத்தமாட்டோம். நாகேந்திரா ராஜினாமாவை முதலமைச்சர் சிவக்குமார் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடையும் முன்பே, கர்நாடக மகரிஷி வால்மீகி பட்டியல் பழங்குடியினர் மேம்பாட்டுக்கழக (KMVSTDCL) முறைகேடு விவகாரம் மாநிலத்தையே உலுக்கியது.
இம்முறைகேட்டிற்கு உடந்தையாக இருக்குமாறு கடும் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டி, அக்கழகத்தின் கணக்குப்பிரிவு கண்காணிப்பாளர் பி. சந்திரசேகரன் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.
இக்கழகத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் கணக்கு அதிகாரி ஆகியோர் இணைந்து, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் உள்ள கழகத்தின் கணக்கில் ரூ. 187 கோடியைக் குவித்ததாகக் கூறப்படுகிறது.
போலி காசோலைகள் மற்றும் RTGS பரிவர்த்தனைகள் மூலம் ரூ. 89.63 கோடி மோசடியாகத் திசைதிருப்பப்பட்டது. இவ்வாறு திசைதிருப்பப்பட்ட நிதி சுமார் 600 வங்கிக் கணக்குகள் வழியாகப் பல நிலைகளில் மாற்றப்பட்டு, இறுதியில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பயன்பாட்டிற்காகப் பணம், தங்கக் கட்டிகள் மற்றும் ஆடம்பர வாகனங்களாக மாற்றப்பட்டது என்று சிபிஐ (CBI) தனது விசாரணையில் குற்றம் சாட்டியது.
இக்குற்றச்சாட்டைத் தொடர்ந்து, ஜூன் 2024-ல் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையிலிருந்து நாகேந்திரா நீக்கப்பட்டார். ஜூலை 12, 2024 அன்று அமலாக்கத் துறையால் (ED) கைது செய்யப்பட்ட நாகேந்திரா, ஜாமின் கிடைக்கும்வரை, அதாவது அக்டோபர் 14, 2024 வரை சிறையில் இருந்தார்.