இந்தியா

2023-2024-ம் ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.1,700 கோடி பெற்ற பா.ஜ.க.

காங்கிரசின் வருமானம் ரூ.452.4 கோடியில் இருந்து 170 சதவீதம் அதிகரித்து ரூ.1,225 கோடியாக உயர்ந்துள்ளது. விளம்பரங்களுக்காக மட்டும் ரூ.591.39 கோடி செலவு செய்துள்ளது.

Maalaimalar

புதுடெல்லி:

ஒவ்வொரு ஆண்டும் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி 2022-2023-ம் ஆண்டில் பா.ஜ.க.வின் ஆண்டு வருமானம் ரூ.2,360 கோடியாக இருந்தது. இந்நிலையில் 2023-2024-ம் நிதியாண்டில் பா.ஜ.க.வின் ஆண்டு வருமானம் ரூ.4,340.5 கோடியாக உயர்ந்துள்ளது.

இதில் ரூ.1,685.6 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்துள்ளதாக அந்த கட்சியின் ஆண்டு தணிக்கை அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளது.

இது முந்தைய ஆண்டை காட்டிலும் சுமார் 83 சதவீதம் அதிகமாகும். மொத்த நிதியில் தேர்தல் பத்திரம் மூலம் பா.ஜ.க. 43 சதவீதம் நன்கொடையை பெற்றிருக்கிறது.

அதே நேரம் 2022-2023-ம் ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க. ரூ.1,294.14 கோடியை பெற்றுள்ளது.

இதன் மூலம் முந்தைய ஆண்டை விட 61 சதவீதம் அதிகம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதே கால கட்டத்தில் காங்கிரசின் வருமானம் ரூ.452.4 கோடியில் இருந்து 170 சதவீதம் அதிகரித்து ரூ.1,225 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது 2022-2023-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு நன்கொடையாக ரூ.268.62 கோடி வந்திருக்கிறது.

அதே நேரம் 2023-2024-ம் ஆண்டில் இந்த நன்கொடை ரூ.1,129.66 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 320 சதவீதம் அதிகமாகும். 2022-2023-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி நன்கொடைகளில் தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.171 கோடி பெற்றிருந்தது. இது 2023-2024-ம் ஆண்டில் இந்த நன்கொடை ரூ.828.36 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 73 சதவீதம் அதிகமாகும்.

தேர்தல் பத்திரங்கள் மூலம் ஒரு ரூபாய் கூட பெறாத கட்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளது. செலவுகளை பொறுத்தவரையில் 2022-2023-ம் ஆண்டில் பா.ஜ.க. ரூ.1,092.15 கோடி செலவு செய்துள்ளது. அதே நேரம் 2023-2024-ல் ரூ.1,754.06 கோடியை செலவு செய்துள்ளது. இதில் விளம்பரங்களுக்காக மட்டும் ரூ.591.39 கோடி செலவு செய்துள்ளது.