பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் தலைமையில் செயல்படவுள்ள தேசிய துணைத் தலைவர்கள், பொது செயலாளர்கள் மற்றும் தேசிய செயலாளர்கள் உள்ளிட்ட குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் பொருளாளர்கள், மத்திய அலுவலக பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறு மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ஆகிய உயர் பதவிகளுக்கு பொறுப்பாளர்களை பாரதிய ஜனதா கட்சி நியமித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தின் பொதுச் செயலாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை இணை அமைச்சராக இருந்த பியூஷ் கோயல், கட்சியின் தேசிய பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாஜக-வின் தேசிய துணைத் தலைவர்களாக 13 பேர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வசுந்தரா ராஜே சிந்தியா, தீரத் சிங் ராவத், ராம் மாதவ், பைஜ்யந்த் ஜெய் பாண்டா, டி புரந்தேஸ்வரி, ரேகா வர்மா, வர்ஷாபென் நரேந்திரபாய் தோஷி, பார்தி பிரவின் பவார், மன்பிரீத் சிங் பாதல், லால் சிங் ஸ்ம்ரி ஆர்யா, நாகராஜா, தாரிக் மன்சூர் மற்றும் மதுசந்திர கர் உள்ளிட்ட 13 பேர் தேசிய துணைத் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பி.எல். சந்தோஷ் தேசிய பொதுச் செயலாளராக தொடர்ந்து நீடிக்கிறார். வினாத் தாவ்டே மற்றும் ஸ்மிருதி இரானி ஆகியோர் எட்டு தேசிய பொதுச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சமூக ஊடக ஒருங்கிணைப்பாளராக இருந்த அமித் மால்வியாவிற்கு பதிலாக சத்தீஸ்கரைச் சேர்ந்த தீபக் மஸ்கே அந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேசமயம், அனில் பலூனி பாஜகவின் ஊடக ஒருங்கிணைப்பாளராகத் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரீத்தி காந்தி, டெல்லியைச் சேர்ந்த சிவானந்த் திவேதி, உத்தரகாண்டைச் சேர்ந்த அலோக் பட் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த அருண் யாதவ் ஆகியோர் சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், யுவ மோர்ச்சா தலைவராக பெங்களூரு தெற்கு எம்பி தேஜஸ்வி சூர்யாவுக்கு பதிலாக ஹேமங் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கரைச் சேர்ந்த ரூப் குமாரி சௌத்ரி மகளிர் அணியின் புதிய தலைவராகவும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த குன்வர் பாசித் அலி சிறுபான்மையினர் அணியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.