Gobardhan scheme 
இந்தியா

கச்சா எண்ணெய்க்கு மாற்றாக உயிரி எரிவாயு - ரூ.23,731 கோடி கோபர்தன் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இந்தியாவின் எரிசக்தி துறையின் தூணாக கோபர்தன் திட்டம் அமையும் என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

நாட்டில் உயிரிவாயு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், ரூ.23,731 கோடி மதிப்பிலான ஒருங்கிணைந்த உயிரி எரிசக்தித் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை மற்றும் பொருளாதார அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உள்நாட்டு சிபிஜி உற்பத்தியை கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகரிக்கும் நோக்கத்துடன், கோபர்தன் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.

ஹார்முஸ் ஜலசந்தியில் தொடர்ந்து நீடித்து வரும் போர் பதற்றம் மற்றும் இடையூறு காரணமாக, இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு (LNG) இறக்குமதியில் 55 முதல் 60 சதவீதம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

இதன் காரணமாக அழுத்தப்பட்ட உயிரி எரிவாயுவை ஒரு உள்நாட்டுத் தீர்வாக மத்திய அரசாங்கம் கருதுகிறது.

கோபர்தன் திட்டம் குறித்து அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

இதுகுறித்து தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ”கோபர்தன் திட்டம் 2026-27 முதல் 2035-36 வரை செயல்படுத்தப்பட்டு, அழுத்தப்பட்ட உயிரிவாயுவை இந்தியாவின் எதிர்கால எரிசக்தி கலவையின் ஒரு முக்கிய தூணாக நிலைநிறுத்தும்.

மேலும் இந்த திட்டம், நாட்டில் உள்ள விவசாயக் கழிவுகள், கால்நடைச் சாணம், சர்க்கரை ஆலை கழிவு, நகராட்சி கரிமக் கழிவுகள் மற்றும் பிற உயிரிவள ஆதாரங்களை தூய்மையான எரிபொருள், இயற்கை உரம், கிராமப்புற வருமானம் மற்றும் தேசியப் பொருளாதார மதிப்பாக மாற்றுவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

உறுதிசெய்யப்பட்ட தேவை, லாபகரமான மற்றும் நிலையான விலை நிர்ணயம், மூலதன உதவி, குழாய்வழி உள்கட்டமைப்பு, கடன் ஆதரவு மற்றும் தொழில்நுட்ப புதியம்பாடு ஆகியவற்றின் மூலம்,

இந்தியாவின் அழுத்தப்பட்ட உயிரிவாயு (CBG) துறையை தேசிய அளவில் கொண்டு செல்வதற்கு தேவையான வலுவான கட்டமைப்பை கோபர்தன் திட்டம் வழங்கும்” என்று தெரிவித்துள்ளார்.