2002 குஜராத் கலவரத்தின் போது நிகழ்ந்த பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இரண்டு குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ள நிலையில், தனது தரப்பு வாதங்களைக் கேட்காமல் தற்காலிக விடுதலை வழங்கப்பட்டிருப்பது தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பில்கிஸ் பானு பகிரங்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது நிகழ்ந்த கோரமான படுகொலைகள் மற்றும் கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிரான சட்டப்போராட்டம் மீண்டும் தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது. இவ்வழக்கில் ஏற்கனவே விசாரணை நீதிமன்றம் மற்றும் மும்பாய் உயர்நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்ட குற்றவாளிகளில் இருவருக்கு உச்சநீதிமன்றம் தற்போது ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு தனக்கு மீண்டும் பழைய அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக பில்கிஸ் பானு வேதனை தெரிவித்துள்ளார்.
நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள இந்த உத்தரவில், குற்றவாளிகள் இருவரும் ஏற்கனவே 17 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்துள்ளனர் என்ற அடிப்படையிலும், அவர்களில் ஒருவரின் கடுமையான உடல் நலக்குறைவு மற்றும் இயலாமையைக் கருத்தில் கொண்டும் இந்த இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு வழக்குகளில் உண்மைகள் மற்றும் சட்டப்பூர்வமான விவகாரங்கள் விரிவாக ஆராயப்பட வேண்டியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. முன்னதாக, குஜராத் அரசால் கடந்த 2022-ஆம் ஆண்டு முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட 11 குற்றவாளிகளின் விடுதலையை உச்சநீதிமன்றம் 2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரத்து செய்து அவர்களை மீண்டும் சிறைக்குத் திரும்ப உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினைத் தொடர்ந்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள பில்கிஸ் பானு, இவ்வழக்கில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் தன்னைக் கலந்தாலோசிக்காமலோ அல்லது தனது தரப்பு வாதங்களைக் கேட்காமலோ இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது எப்படி என்று கடுமையான கேள்தியை எழுப்பியுள்ளார். பல வருடங்களாகப் போராடிப் பெற்ற நீதி தன்னிடம் இருந்து நழுவிச் செல்வது போல உணர்வதாகவும், தமக்கும் தனது குடும்பத்தினருக்கும் மற்றும் நீதி மீது நம்பிக்கை வைத்துள்ள கோடிக்கணக்கான பெண்களுக்கும் இந்த முடிவு பாதுகாப்பற்ற தன்மையை உருவாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன் வாழ்நாளில் இழந்த அமைப்பையும் நீதியையும் மீட்க தான் தொடர்ந்து சட்ட ரீதியாகப் போராடுவேன் என்று பில்கிஸ் பானு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தனக்காகவும், பாதுகாப்பான எதிர்காலம் தேவைப்படும் தனது குழந்தைகளுக்காகவும், குறிப்பாக இக்கொடூரச் சம்பவத்தில் பறிபோன தனது மூன்று வயது மகள் சலேஹாவின் நினைவாகவும் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக அவர் அறிவித்துள்ளார். வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் தனது வாழ்நாள் முழுவதும் நீதிக்காகத் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கக் கூடாது என்றும், இந்த நிலையை மாற்றத் தனது போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.