நேபாளத்தில் உள்ள கோசி மற்றும் கண்டக் ஆறுகளில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து, அந்த வெள்ள நீரால் பீகார் மாநிலத்திற்குள் அடித்து கொண்டு வரப்பட்ட மீன்களை உண்ண வேண்டாம் என பீகார் மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேபாளத்தின் மேற்கு சம்பாரன், கிழக்கு சம்பாரன், சீதாமர்ஹி, கிஷன்கஞ்ச், பூர்ணியா மற்றும் அராரியா உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீரில், பாதுகாப்பான வரம்பை தாண்டி நச்சுத்தன்மை கொண்ட ஆர்சனிக் காணப்படுகிறது.
கங்கை நதி ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் ஆர்சனிக் அமிலத்தின் அளவு (நச்சுத்தன்மை) மிக அதிகமாக கண்டறியப்பட்டுள்ளன.
மேலும் நேபாள எல்லையை ஒட்டியுள்ள ஏழு மாவட்டங்களில், ஆற்று நீரில் அதிக இரும்புச்சத்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், நீர் துவர்ப்புச் சுவையைக் கொண்டிருப்பதுடன், பாத்திரங்கள் மற்றும் ஆடைகளில் சிவப்பு-மஞ்சள் கறைகளையும் ஏற்படுத்துகிறது.
நேபாளத்தில் தேங்கி நிற்கும் நீரில் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்து, டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியா நோய்களுடன், தோல் மற்றும் கண் நோய்த்தொற்றுகளின் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடம், இதேபோன்ற எச்சரிக்கை ஒன்றை நேபாள காவல்துறை விடுத்துள்ளது.
இந்த நிலையில் நேபாளத்தின் வடக்கு பகுதியில் உள்ள முக்கிய நீர்வழிகளான கண்டக் மற்றும் கோசி ஆறுகள் வழியாக திரிசூலி ஆறு பீகார் மாநிலத்திற்குள் பாய்ந்து வருகிறது.
பீகாரில் ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய வகையிலான மீன்கள் ஆற்றில் காணப்படுகின்றன.
அந்த வகையான மீன்களை சாப்பிட்ட சில நபர்கள் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் ஆற்று நீரில் இயல்பை விடப் பல மடங்கு அதிகமான அளவு இரும்புச்சத்து பதிவாகியுள்ளது.
வெள்ள நீரால் பீகாரின் எல்லை மாவட்டங்கள் முழுவதும் உள்ள விவசாய நிலங்களும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், மாநிலத்தில் தானியங்கள் மற்றும் காய்கறிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பீகார் வெள்ள நீரில் பிடிக்கப்பட்ட மீன்களில் கழிவு நீர் மாசுபாடு, பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பிற நோய்கிருமிகள் இருக்க வாய்ப்புள்ளதால், அந்த மீன்களை வாங்கவோ, விற்கவோ, உட்கொள்ளவோ வேண்டாம் என விலங்கு மற்றும் மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது.
பீகாரின் பால், மீன்வளம் மற்றும் கால்நடை வளத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் வெள்ள நீர் வடிகால்கள் மாசடைந்து இறந்த விலங்குகள் மற்றும் பிற நச்சுத் தன்மையுடன் தொடர்ந்து நீடித்து வருவதால், இந்த மீன்கள் உண்பதற்குப் பாதுகாப்பற்றவை என்றும், சுற்றுச்சூழல் நிலைமைகள் சீராகும் வரை வெள்ள நீரில் பிடிக்கப்பட்ட மீன்களை மக்கள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.