போலி பட்டங்கள் மற்றும் போலியான கல்வி சான்றிதழ்களை பயன்படுத்தி பணி நியமனங்களைப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட 3,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை மாநில அரசு பணி நீக்கம் செய்யும் என்று பீகார் கல்வி அமைச்சர் மிதிலேஷ் திவாரி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “போலி பட்டங்கள் மற்றும் போலியான கல்விச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி நியமனங்களை பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட 3,000-க்கும் மேற்பட்ட அரசு ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
2006 முதல் 2015 வரை நடைபெற்ற ஆசிரியர் ஆட்சேர்ப்பு குறித்து மாநில ஊழல் தடுப்பு பிரிவு நடத்திய விரிவான விசாரணையை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட பல ஊழியர்கள் போலி கல்லூரிகளால் வழங்கப்பட்ட சான்றிதழ்களைச் சமர்ப்பித்து இருந்ததையும், மேலும் பலர் ஆசிரியர் பணி பெறுவதற்காக போலியான கல்வித் தகுதிகளை பயன்படுத்தி இருந்ததையும் புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர்.
அந்த அறிக்கையின் அடிப்படையில், போலியாக ஆவணங்கள் கொடுத்து பணியில் சேர்ந்தவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் குற்றவாளிகளாக அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, அவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள என்.டி.ஏ அரசுகள் ஊழலுக்கு எதிராக சகிப்புத்தன்மையற்ற கொள்கையை பின்பற்றுகின்றன.
நிதீஷ்குமார் முதலமைச்சராக இருந்தபோது இந்த விவகாரம் குறித்து ஊழல் தடுப்பு விசாரணையை நடத்த அவர்தான் உத்தரவிட்டார்” என்று பீகார் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.