நீட் (NEET) வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறவும், சிறையில் உள்ளவர்களை விடுவிக்கவும் பீகார் அரசு முடிவு செய்துள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறவும், பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுவிக்கவும் பீகார் அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.
மாநில உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், "ஜூலை 26-ஆம் தேதியன்று காலை 6 மணிக்கு முன்னதாக நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட அனைத்து முதல் தகவல் அறிக்கைகள் (FIR), புகார்கள் மற்றும் விளக்கம் கோரும் அறிவிப்புகள் (show-cause notices) ஆகியவை திரும்பப் பெறப்படுகிறது," என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை எதிர்த்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சி.ஜே.பி.) சார்பில் மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகலை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தது. இந்த போராட்டம் நாடு முழுக்க பல மாநிலங்கள் வரை மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது.
அந்த வரிசையில் பீகார் மாநிலத்திலும் மாணவர்கள், மாணவர் அமைப்புகள் சார்பில் போரட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மாநிலம் முழுக்க நடைபெற்ற போராட்டங்களில் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு, பலர் கைது செய்யப்பட்டனர்.