இந்தியா

சட்டமேலவை பதவியை ராஜினாமா செய்தார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்

நிதிஷ்குமார் வருகிற 10-ந் தேதி மேல்சபை எம்.பி.யாக பொறுப்பேற்பார் என்று தெரிகிறது.

பீகார் மாநிலத்தில் நீண்ட காலமாக முதலமைச்சராக இருந்தவர் என்ற சாதனையை படைத்தவர் நிதிஷ்குமார். ஐக்கிய ஜனதாதள தலைவரான அவர் மாநில அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டு மத்திய அரசியலுக்கு செல்ல முடிவு செய்தார்.

இதைத்தொடர்ந்து நிதிஷ்குமார் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மேல்சபை எம்.பி.யாக முடிவு செய்தார். சமீபத்தில் நடந்த மேல்சபை தேர்தலில் அவர் வெற்றி பெற்று எம்.பி.ஆனார்.

மேல்சபை எம்.பி. ஆனதையொட்டி நிதிஷ்குமார் தனது சட்ட மேலவை உறுப்பினர் (எம்.எல்.சி.) பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அவரது கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. நேற்று தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் நிதிஷ்குமார் தனது எம்.எல்.சி. பதவியை இன்று ராஜினாமா செய்தார். இதை பீகார் சட்ட மேலவை தலைவர் சேர்மன் அவதேஷ் நாராயணன் சிங் தெரிவித்தார். ஐக்கிய ஜனதாதள சட்டமேலவை உறுப்பினர் சஞ்சய்காந்தியின் மூலம் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

நிதிஷ்குமார் வருகிற 10-ந் தேதி மேல்சபை எம்.பி.யாக பொறுப்பேற்பார் என்று தெரிகிறது. அதைத்தொடர்ந்து அவர் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவார். பீகார் புதிய முதல்வராக பா.ஜ.க-வை சேர்ந்தவர் பொறுப்பேற்பார்.