பீகார், குஜராத், மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 3 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று பதிவாகும் வாக்குகள் ஆகஸ்ட் 3ம் அன்று எண்ணப்படுகின்றன.
பீகார் மாநிலத்தின் பங்கிப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தவர் பாஜகவைச் சேர்ந்த நிதின் நபின். இவர் மாநிலங்களவை எம்.பி.யாக சமீபத்தில் பதவியேற்றார். இதனால் அவரது தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
மத்திய பிரதேத்தின் தாட்டியா தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரசைச் சேர்ந்த ராஜேந்திர பாரதி தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அவரது தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
குஜராத்தின் மஞ்சள்பூர் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான யோகேஷ்பாய் நரேந்தாஸ் படேல் சமீபத்தில் காலமானார். இதனால் அவரது தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த தொகுதிகளுக்கு அறிவித்தபடி இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை முதல் நடைபெற்று வருகிறது.
இதில் குறிப்பாக பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பங்கிபூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரும் ஜன் சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர் போட்டியிடுகிறார்.
முன்னதாக அவரை எதிர்த்து பாஜக சார்பில் அபிஷேக் குமார் சின்ஹா என்பவர் போட்டியிட இருந்த நிலையில் அவர் குடும்ப காரணங்களை தெரிவித்து வாபஸ் பெற்றார். அவருக்கு மாற்றாக நீரஜ் குமார் சின்ஹா என்பவரை பாஜக களம் இறக்கியது.
இதனிடையே இன்று வாக்குப்பதிவு தொடங்குவதற்கும் உன் நேற்று இரவே ஜன் சுராஜ் கட்சியின் நிர்வாகிகள் 20 பேர் பாட்னா காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் வாக்குபதிவில் சலசலப்பை ஏற்படுத்த முயன்றதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி அறிந்ததும் நள்ளிரவிலேயே பிரசாந்த் கிஷோர் தனது ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்திற்கு நேரடியாகச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து பேட்டியளித்த அவர், "எங்கள் கட்சியின் தொண்டர்கள் ஏதேனும் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது முறைப்படி வழக்குப்பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுங்கள்.
தோல்வி பயத்தால் பீகார் அரசு நடுங்கிக்கொண்டிருக்கிறது. நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட காரணத்தை காவல்துறை உடனடியாக விளக்க வேண்டும். இல்லையெனில் காவல்துறை மீதே கடத்தல் வழக்கு தொடருவோம்" என எச்சரித்தார்.
பங்கிபூர் இடைத்தேர்தலில் 422 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை தொடரும்.
காலை 11 மணி வரை சுமார் 11.5 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.
பல ஆண்டுகளாக பாஜக பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வந்த ஒரு தொகுதியில், கிஷோரின் நுழைவு போட்டியை விறுவிறுப்பாக்கியுள்ளது.