இந்தியா

பீகார் படகு விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் முர்மு இரங்கல்!

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் கங்கை நதியில் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், குழந்தைகள் உட்படப் பலியானவர்களின் குடும்பங்களுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவரின் பதிவு

இதுகுறித்துத் தனது அதிகாரப்பூர்வ 'X' பக்கத்தில் பதிவிட்டுள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, "பீகாரின் வைஷாலி மாவட்டத்தில் நடந்த படகு விபத்தில் குழந்தைகள் உயிரிழந்த செய்தி என் இதயத்தை உலுக்குகிறது.

துக்கத்தில் மூழ்கியிருக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

விபத்து எப்படி நடந்தது?

ராகோபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராம்பூர் ஷியாம்சந்த் கிராமத்திற்கு அருகில், ஒரு விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக 15 முதல் 20 பயணிகள் கங்கை நதியில் படகு மூலம் பயணம் செய்தபோது இந்த கோர விபத்து நேரிட்டுள்ளது. திடீரெனப் படகு கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் தலைகீழாகக் கவிழ்ந்தது.

8 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி

இந்த விபத்தில் 8 குழந்தைகள் உட்பட மொத்தம் 13 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் என்று வைஷாலி மாவட்ட ஆட்சியர் வர்ஷா சிங் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், விபத்தில் சிலரை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆற்றில் மேலும் யாரேனும் காணாமல் போயுள்ளார்களா என்பதை அறிய மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் உள்ளூர் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

இந்தச் துயரச் சம்பவத்திற்குப் பீகார் முதல்வர் சாம்ராட் சௌத்ரி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் இந்தச் சம்பவத்திற்குத் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளதோடு, உள்ளூர் நிர்வாகத்தை உடனே தொடர்பு கொண்டு மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும், காயமடைந்தவர்களுக்குச் சிறந்த சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

SCROLL FOR NEXT