இந்தியா

கங்கையில் படகு கவிழ்ந்து விபத்து.. இருவர் பலி - ஐவர் மாயம்

பலத்த காற்று காரணமாக அந்த படகு கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது.

பீகார் மாநிலம் பாட்னாவில் பார்ஹ் நகருக்கு உட்பட்ட உமாநாத் கங்கா காட் அருகே, சுமார் 14 பயணிகளுடன் சென்ற படகு ஒன்று கங்கை நதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கங்கை நதியின் நடுவே படகு சென்றுகொண்டிருந்த போது திடீரென வீசிய பலத்த காற்று காரணமாக அந்த படகு கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது.

படகில் இருந்த ஏழு பேர் ஆற்று நீரில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மற்றவர்கள் அருகில் இருந்த மற்றொரு படகின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். மூழ்கிய 7 பேரில் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்ற ஐவர் மாயமாகியுள்ளனர்.

மாநிலப் பேரிடர் மீட்புப் படை சம்பவ இடத்திற்கு விரைந்து, மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.