எதிரி நாடுகளின் டிரோன் தாக்குதல்களை முறியடிப்பதற்காக இந்தியாவால் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 'பார்கவஸ்த்ரா' அமைப்பின் சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது.
ராஜஸ்தானில் உள்ள பொக்ரான் சோதனை தளத்தில் நவம்பர் 20 முதல் 24 வரை நடத்தப்பட்ட சோதனைகளில்
ஒரே நேரத்தில் பல டிரோன்களை கண்டறிந்து, பின்தொடர்ந்து, அழிக்கும் பார்கவஸ்த்ரா அமைப்பின் திறன் நிரூபிக்கப்பட்டது.
பார்கவஸ்திரா, சோலார் டிபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ் லிமிடெட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு வாகன அடிப்படையிலான பாதுகாப்பு அமைப்பாகும்.
ஒரே நேரத்தில் பல ஆளில்லா டிரோன்கள் நடத்தும் தாக்குதல்களை முறியடிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்தியாவால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட முதல் இரு அடுக்கு வாகன அடிப்படையிலான டிரோன் பாதுகாப்பு அமைப்பு இது.
இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட ராக்கெட்டுகள் மற்றும் குறு ஏவுகணைகள் பார்கவஸ்திராவில் இடம்பெற்றுள்ளன.
முதல் கட்டத்தில், டிரோன்கள் ராக்கெட்டுகளை பயன்படுத்தித் தாக்கப்படும். இரண்டாம் கட்டத்தில், இலக்குகளை துல்லியமாக அழிப்பதற்காக, தானாக இயங்கும் வழிகாட்டு அமைப்புகள் மற்றும் சென்சார்கள் கொண்ட குறு ஏவுகணைகள் பயன்படுத்தப்படும்.
இந்த அமைப்பு, வாகனத்தில் பொருத்தி பல்வேறு இராணுவத் துறைகளில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் 'மேக்-II' திட்டத்தின் ஒரு பகுதியாக பார்கவஸ்திரா உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்திற்கு 2024 ஜூலை 9 அன்று பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
நவீன போர்க்களங்களில் டிரோன்கள் பயன்பாடு அதிகரித்து வருவதால், பார்கவஸ்திராவின் உருவாக்கம் இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் செயல்திறனை மேம்படுத்துவதற்கான மேலதிக சோதனைகளுக்கு பிறகே, இதை ஆயுதப் படைகளில் சேர்ப்பது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும்.