இந்தியா

பெங்களூரு மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் - பெண்களுக்கு இதுதான் தேவை: இளம்பெண் வெளியிட்ட வீடியோ

பெங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து மும்பை ரெயில் நிலையத்திற்கு வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் நேற்று துவங்கி வைக்கப்பட்டது.

பெங்களூரு மும்பை வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண்களின் பாதுகாப்பிற்கு தேவையான முக்கிய அம்சங்கள் இருப்பதாக வீடியோ ஒன்றை இளம்பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா ரெயில் நிலையத்தில் இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரெயில் நிலையத்திற்கு வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் நேற்று துவங்கி வைக்கப்பட்டது.

இந்த ரெயிலானது பெங்களூரில் இருந்து இரவு 7:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11:55 மணிக்கு மும்பைக்கு வந்தடைகிறது.

இந்த வழித்தடத்தில் திங்கட் கிழமையை தவிர வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று மும்பை ரெயில் நிலையத்தில் இரவு 8:10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12:00 மணிக்கு பெங்களூரு ரெயில் நிலையத்திற்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வந்தடைகிறது.

மேலும் இந்த வழித்தடத்தில் செவ்வாய் கிழமையை தவிர வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம்பெண் பயணம்

இந்த நிலையில் வந்தே பாரத் ரெயிலில் பெங்களூரில் இருந்து மும்பைக்கு இளம்பெண் திவ்யா சாஹா ஒருவர் பயணம் செய்தார்.

பெண்களுக்கு பாதுகாப்பு அம்சங்கள்

அப்போது தனது ரெயில் பயணத்தை வீடியோ பதிவு செய்த அவர், புதிய வந்தே பாரத் ரெயிலில் பெண்களின் பாதுகாப்பிற்கு ஏற்றவகையில் சிசிடிவி கேமராக்கள், பூட்டப்பட்ட கதவுகள் மற்றும் ஒளியூட்டப்பட்ட நடைபாதைகள் இருப்பதாக கூறினார்.

மேலும் வந்தே பாரத் ரெயிலின் அம்சங்கள், பெண்களுக்கு இரவு நேர பயணங்களை பாதுகாப்பாக உணரவைப்பதாக திவ்யா கூறினார்.

வந்தே பாரத் ரெயிலில் பூட்டப்பட்ட கதவுகள் இருப்பதால், இரவு நேரத்தில் பயணச்சீட்டு இல்லாமல் ஒருவர் ரெயிலுக்குள் நுழைவது தடுக்கப்படுகிறது.

ரெயில் கழிவறைகள்

இதையடுத்து பேசிய அவர், பெண்களுக்கு பெரிய கவலையாக இருக்கும் ரெயிலின் கழிவறைகள், வந்தே பாரத் ரெயிலில் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

இளம்பெண் பதிவிட்ட வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வைரலானது.

இதுகுறித்து பதிவிட்ட பயனர் ஒருவர், இவை பெண்களுக்கு மட்டும் பாதுகாப்பான அம்சங்கள் அல்ல, ஒரு ஆணுக்கும் பாதுகாப்பான அம்சமாக உள்ளதாக குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT