பள்ளி மாணவ- மாணவிகளிடம் எதிர்காலத்தில் என்னவாக வரவேண்டும் என விரும்புகிறாய்? என ஆசிரியர்கள் கேட்கும் போது, அவர்கள் நான் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும், ஐ.பி.எஸ். ஆக வேண்டும், முதல்-அமைச்சர், விஞ்ஞானி ஆக வேண்டும் என கூறுவார்கள். அது போன்று 12 வயது சிறுவன், எதிர்காலத்தில் நான் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்று தனது கனவை வெளிப்படுத்தும் ஒரு வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
முகமது ஆசிக் என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள மனதை கவரும் வீடியோவில், பெங்களூருவில் குடிசை பகுதியில் வசிக்கும் நாகராஜ் என்ற 12 வயது சிறுவனுடன் அவர் உரையாடும் காட்சிகள் உள்ளது. அதில், நாகராஜ் தனது கனவு மற்றும் லட்சியங்களை ஆசிக்குடன் பகிர்ந்து கொள்கிறார். அதில், நாகராஜ் தான் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும், அதற்கு கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என கூறுகிறார். மேலும் தனது வீட்டில் மின்சாரம் இல்லாததை சுட்டிக்காட்டும் அவர், குடிசை வாழ்க்கையின் எதார்த்தத்தை வெளிச்சம் போட்டு காட்டும் காட்சிகள் உள்ளது.
அதோடு, டாக்டர் அம்பேத்கார், மகாத்மா காந்தியின் புத்தகங்களை படிப்பது எனது பொழுதுபோக்கு எனக்கூறும் நாகராஜ், நமது நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி மேலும் அறிய விரும்புவதாகவும், தன் பகுதி மக்களுக்கு உதவுவதும், பட்டினியால் வாடுவோர்களுக்கு உணவு வழங்குவதும் தனது லட்சியம் என அவர் கூறுகிறார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.