இந்தியா

அரசு பணி தேர்வுகளுக்கான விண்ணப்ப கட்டணம் ரத்து: சுவேந்து அதிகாரி

விண்ணப்பதாரர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பில் இரண்டு ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

மேற்கு வங்கத்தில் அரசு பணி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்ப கட்டணங்கள் ரத்து செய்யப்படும் என்று சுவேந்து அதிகாரி தெரிவித்தார். இந்த நடவடிக்கை, பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் வேலையில்லாத இளைஞர்களின் நிதி சுமையை குறைக்கும்.

பச்சிம் மெதினிபூர் மாவட்ட காவல்துறை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுவேந்து அதிகாரி, இந்த முடிவு பாஜகவின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்று என்று குறிப்பிட்டார்.

தேர்தல் அறிக்கை:

"இது எங்கள் தேர்தல் அறிக்கையில் உள்ளது. உரிய நேரத்தில் விண்ணப்ப கட்டணங்களை நாங்கள் ரத்து செய்வோம்" என்று அவர் கூறினார்.

மேலும், 2027-ஆம் ஆண்டு முதல் மாநில அரசு பணி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பில் இரண்டு ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

இது தவிர, பட்டதாரிகள் மற்றும் பட்டதாரி அல்லாதவர்களுக்கு 'போரோசா' (Bhorosa) என்ற திட்டத்தின் மூலம் நிதி உதவி வழங்கும் திட்டத்தையும் அவர் அறிவித்தார்.

நிதியுதவி அறிவிப்பு:

"பல நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும், நாங்கள் ஏற்கனவே பல முன்னெடுப்புகளைச் செய்துள்ளோம். பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்களின் ஊதியமும் ஓரளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

"'போரோசா' திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான விவரங்களை விரைவில் அறிவிப்போம். இத்திட்டத்தின் கீழ், தேர்வுகளுக்கு தயாராகும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு நிதி உதவி வழங்கப்படும்..." என்று சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.

மேலும், ஜனவரி மாதம் முதல் 'பகினி நிவேதிதா' என்ற திட்டத்தை தொடங்கப்போவதாகவும் அவர் அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ், பள்ளி படிப்பை முடித்துவிட்டு உயர்கல்வியை தொடர விரும்பும் மாணவிகளுக்கு, மூன்று ஆண்டுகளில் மொத்தம் 50,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.

மூன்று முக்கிய அம்சங்கள்:

மாநில அரசின் வேலைவாய்ப்பு உத்தியானது மூன்று முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தும் என்று அவர் கூறினார்: அரசுப் பணி நியமனங்கள், தனியார் துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ஊக்குவித்தல்.

அரசு பணி நியமனங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய மாநில அரசு பணியாற்றி வருவதாகவும், நியமன செயல்பாட்டில் அரசியல் தலையீடு இருப்பதை "ஒருபோதும் அனுமதிக்க முடியாது" என்றும் சுவேந்து அதிகாரி திட்டவட்டமாகக் கூறினார்.

SCROLL FOR NEXT