இந்தியா

ரெயில்வே ஏசி பெட்டிகளில் தொடரும் 'பெட்ஷீட்' திருட்டு-4 ஆண்டுகளில் ரூ.104.51 கோடி இழப்பு:RTI தகவல்!

நடப்பு ஆண்டில் இதுவரை 2.31 லட்சம் பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

இந்திய ரெயில்வேயின் ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள், தங்களுக்கு வழங்கப்படும் பெட்ஷீட், போர்வைகள் மற்றும் டவல்களைத் திருடிச் செல்லும் அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தற்போது வெளிவந்துள்ளன.

கடந்த 4 ஆண்டுகளில் (2022 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில்) மட்டும் சுமார் 1.27 கோடி பெட்ஷீட் உள்ளிட்ட பெட்ஷீட் பொருட்கள் காணாமல் போயுள்ளன. இதனால் ரெயில்வே துறைக்கு ரூ.104.51 கோடி அளவுக்குப் பலத்த நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒவ்வொரு இரவும் சராசரியாக 8 லட்சம் பயணிகள் ஏசி ஸ்லீப்பர் வகுப்புகளில் பயணிக்கின்றனர். இவர்களில் சராசரியாக 1000 பயணிகளில் ஒருவர், தங்களுக்கு வழங்கப்படும் பெட்ஷீட் பொருட்களில் ஏதாவது ஒன்றை தங்களோடு திருடிச் செல்வதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

கடந்த 2022 ஆம் ஆண்டில் 24.83 லட்சமாக இருந்த இந்தத் திருட்டுச் சம்பவங்கள் ஆண்டுக்காண்டு தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளன. 2023-ல் 29.67 லட்சமாகவும், 2024-ல் 31.31 லட்சமாகவும், 2025-ல் 38.81 லட்சமாகவும் திருடப்பட்ட பொருட்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நடப்பு ஆண்டில் இதுவரை 2.31 லட்சம் பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

காணாமல் போன பொருட்களின் விவரங்களைப் பிரித்துப் பார்க்கும்போது, மிக எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய சிறிய டவல்கள்தான் அதிகமாகத் திருடப்பட்டுள்ளன.

* டவல்கள் - 46.57 லட்சம்

* பெட்ஷீட்கள் - 41.13 லட்சம்

* தலையணை கவர்கள்- 23.59 லட்சம்

* போர்வைகள்- 12.95 லட்சம்

* தலையணைகள்-2.76 லட்சம்

மாநிலங்கள் மற்றும் ரெயில்வே கோட்டங்கள் வாரியாகப் பார்க்கும்போது, ராஜஸ்தானின் பிகானேர் கோட்டத்தில் தான் அதிகபட்சமாக 25.76 லட்சம் பொருட்கள் திருடப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக முறையே:

* ராஞ்சி - 9.31 லட்சம்

* டெல்லி - 8.21 லட்சம்

* மும்பை - 8.17 லட்சம்

* ஜோத்பூர் - 8.09 லட்சம்

* அகமதாபாத் - 6.94 லட்சம்

* தானாபூர் - 5.72 லட்சம் பொருட்கள் காணாமல் போயுள்ளன.

பொதுவாக ஏசி பெட்டிகளில் பயணிக்கும் ஒவ்வொரு பயணிக்கும் 2 பெட்ஷீட்கள், 1 போர்வை, 1 தலையணை, 1 தலையணை கவர் மற்றும் 1 டவல் ஆகியவை வழங்கப்படுகின்றன. இந்தத் திருட்டுகளால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய, ரெயில்வே ஒப்பந்ததாரர்கள் ஏசி கோச் உதவியாளர்களின் சம்பளத்திலிருந்து மாதந்தோறும் ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை பிடிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தத் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு சட்டப்படி முதல்முறை சிக்கினால் ரூ.1,000 அபராதமும் 1 ஆண்டு சிறைத் தண்டனையும், மீண்டும் சிக்கினால் ரூ.2,000 அபராதமும் 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் பயணிகள் பெட்ஷீட் திருடுவதில் சந்தேகம் எழுந்தால் ரெயில்வே காவலர்கள் பைகளைச் சோதனை செய்யும் நிலையும் உருவாகியுள்ளது.