தனது மகள்களின் உயர் கல்விச் செலவிற்காக 47 வயது தாய் ஒருவர், காலணிகள் இன்றி வெறும் கால்களுடன் ஓடி மாரத்தான் போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
வறுமைக்கு மத்தியிலும் மகள்களின் கனவை நனவாக்கப் போராடும் இந்த தாயின் விடாமுயற்சி, அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
மகாராஷ்டிராவின் பீட் மாவட்டம், அம்பாஜோகை பகுதியைச் சேர்ந்தவர் ரமாபாய் ரன்வீர் (47). மும்பையில் நேரிட்ட விபத்து ஒன்றில் இவரது கணவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தனது இரண்டு மகள்களை வளர்க்கும் பொறுப்பு ரமாபாயின் தோள்களில் விழுந்தது.
ஆரம்பத்தில் விவசாயக் கூலி வேலை செய்து வந்த அவர், தனது மகள்கள் இருவரும் படித்து பெரிய அதிகாரிகளாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
இதற்காக, தனது மூத்த மகளை அம்பாஜோகையில் உள்ள ஒரு போட்டித் தேர்வு பயிற்சி அகாடமியில் சேர்த்த ரமாபாய், மகளின் கல்விக்கு உதவ அதே அகாடமியிலேயே சமையல் வேலைக்கும் சேர்ந்தார்.
அங்கு தினமும் மாணவர்களுக்கு சமையல் செய்து கொண்டே, போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கும் தனது மகள்களையும் கவனித்து வந்தார்.
இந்நிலையில், அப்பகுதியில் உள்ள உள்ளூர் அமைப்பு ஒன்று 'அமிர்த தௌட்' என்ற பெயரில் மாரத்தான் போட்டி ஒன்றை நடத்தியது.
இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ. 3,000 பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மகள்களுக்குப் படிக்கப் புத்தகங்கள் வாங்க இந்த பணம் உதவும் என எண்ணிய ரமாபாய், போட்டியில் பங்கேற்கத் துணிந்தார்.
போட்டித் தினத்தன்று, விளையாட்டு ஆடைகளுடன் வந்திருந்த இளம் வயது வீராங்கனைகளுக்கு மத்தியில், ரமாபாய் ஒரு சாதாரண புடவை அணிந்து களமிறங்கினார்.
போட்டி தொடங்கியதும் அவர் அணிந்திருந்த செருப்புகள் நழுவத் தொடங்கின. சற்றும் யோசிக்காத அவர், செருப்புகளைக் கழற்றி கையிலேயே பிடித்துக் கொண்டு, கற்கள் நிறைந்த குளிர்ந்த சாலையில் வெறும் கால்களோடு ஓடத் தொடங்கினார்.
ஒரு கையால் புடவையைச் சரிசெய்து கொண்டு, மற்ற அனைத்து வீராங்கனைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ரமாபாய் முதலிடத்தைப் பிடித்து எல்லையைக் கடந்தார்.
இதைப் பார்த்த அங்கிருந்த பார்வையாளர்கள் அனைவரும் வியந்து அவருக்கு எழுந்து நின்று கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.
நெகிழ்ச்சியில் உச்சமாக, ரமாபாயின் மகள் பூஜாவும் இந்த போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடத்தை வென்றார்.
தனது தாயை போட்டியில் பங்கேற்க வற்புறுத்திய பூஜா, 'கடினமான சூழ்நிலையிலும் எங்களை வளர்க்க என் தாய் ஒரு போதும் எங்களை கைவிட்டதில்லை. அவர் முதலிடம் பிடிப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை' என்று பெருமிதத்துடன் கூறினார்.
பூஜா தற்போது காவல்துறை பணிக்கான தேர்விற்கும், அவரது சகோதரி வங்கித் தேர்வுகளுக்கும் தயாராகி வருகின்றனர்.
பூஜாவின் அர்பணிப்பைக் கண்டு, அவர் படிக்கும் அகாடமியின் இயக்குனர் அவரது பயிற்சிக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெற்றிக்குப் பின் பேசிய ரமாபாய் ரன்வீர், "போட்டியில் பல பெண்கள் பங்கேற்றனர், ஆனால் எப்படியாவது நான் இந்த பரிசை வெல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
நான் ஓடும்போது என் மகள்களின் எதிர்காலம் மட்டுமே என் கண் முன்னால் தெரிந்தது. இந்த ரூ. 3,000 பரிசுத்தொகையை வைத்து அவர்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்குவேன்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
சமையலறையில் கஷ்டப்பட்டு உழைக்கும் ஒரு தாய், தனது மகள்களின் படிப்புக்காக ஓட்டப்பந்தயக் களத்திலும் சாதித்துக் காட்டியிருப்பது பலருக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.