இந்தியா

டிஜிட்டல் மோசடிகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு வங்கிகள் இழப்பீடு வழங்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்

வங்கிகளில் திடீரென வந்து விழும் அதிக பணத்தொகை தொடர்பாக, அருகிலுள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்க வேண்டியதும் வங்கிகளின் பொறுப்பு.

டிஜிட்டல் மோசடிகளால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு வங்கிகளே முழு பொறுப்பேற்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிதி நிறுவனங்களின் கவனக்குறைவாலேயே மோசடி நிகழ்ந்துள்ளது என விசாரணையில் நிரூபிக்கப்பட்டால், பணத்தை இழக்கும் வாடிக்கையாளர்களுக்கு அந்நிதி நிறுவனங்கள் முழு இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

“இவையெல்லாம் மிகவும் நுட்பமான விஷயங்கள். இந்த வங்கிகளுக்குத் தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்படாவிட்டால், அவை ஒருபோதும் திருந்தாது” என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கண்காணிப்பு

மேலும் ஒரு வங்கிக்கணக்கின் சந்தேகத்திற்கிடமான திடீர் பணப் பரிவர்த்தனைகளைக் கண்காணிப்பது, உடனடியாகத் தடுப்பது மற்றும் முடக்குவது வங்கிகளின் முக்கியப் பொறுப்பு என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

அப்படி வங்கிகளில் திடீரென வந்து விழும் அதிக பணத்தொகை தொடர்பாக, அருகிலுள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்க வேண்டியதும் வங்கிகளின் பொறுப்பு என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

விசாரணையின் போது, ​​மத்திய அரசுக்காக ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர். வெங்கடரமணி, நீதிமன்றத்தின் தலையீடு, அரசு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கை, மற்றும் பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஆகியவற்றின் காரணமாக, டிஜிட்டல் கைது வழக்குகள் கடந்த ஆண்டை விட சுமார் 50% குறைந்துள்ளதாக தெரிவித்தார்.

இருப்பினும், இந்த ஆண்டில் மட்டும் டிஜிட்டல் மோசடிகளால் இந்தியா முழுவதும் சுமார் ரூ.800 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி சுட்டிக் காட்டினார்.

ரிசர்வ் வங்கி விதிமுறைகள்

இந்திய ரிசர்வ் வங்கி தயாரித்து வரும் புதிய 'கேஒய்சி' (KYC) திருத்த வழிகாட்டுதல்களை (2026) தாங்கள் ஆய்வு செய்யவுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த வழிகாட்டுதல்கள் நவம்பர் 30-க்குள் அறிவிக்கப்பட்டு, டிசம்பர் 31-க்குள் அமல்படுத்தப்பட உள்ளன.

SCROLL FOR NEXT