இந்தியா

ஆளுநரின் ஒற்றை வார்த்தை: விடுதியில் அசைவ உணவை முடிவுக்கு கொண்டு வரும் உ.பி. பல்கலைக்கழகம்..!

பெருங்குடல் புற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் குறைவு என்பதால் உலகம் முழுவதும் அதிகமான மக்கள் சைவ உணவிற்கு மாறி வருகின்றனர்.

விடுதியில் அசைவ உணவு சமைப்பதற்குத் தடைவிதித்து உத்தர பிரதேச மாநில கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டது.

இதையடுத்து மாணவர்கள் தங்களின் தினசரி புரோட்டீன் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மீல் மேக்கர் (Soya Chunks), பன்னீர் மற்றும் சோயா பன்னீர் (Tofu) போன்ற சைவ உணவுகளை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்த உள்ளது.

அசைவ உணவு குறித்து ஆளுநர் ஆனந்திபென் படேல் கவலை:

உத்தர பிரதேச மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ள ஆளுநர் ஆனந்திபென் படேல், ஜூலை 13 அன்று கே.ஜி.எம்.யு பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு, சில விடுதி உணவகங்களில் அசைவ உணவு பரிமாறப்படுவதாகக் கவலை தெரிவித்தார்.

அவரது கருத்துக்கள், அனைத்து விடுதிகளிலும் அசைவ உணவு தயாரிப்பதற்குத் தடை விதிக்க பல்கலைக்கழக நிர்வாகத்தைத் தூண்டியதுடன், அரசியல் விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.

கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகம் நடவடிக்கை:

இதையடுத்து பல்கலைக்கழகத்தில் உள்ள 18 விடுதி உணவகங்களுக்கும் புரதச்சத்து நிறைந்த சைவ உணவைப் பரிமாற அறிவுறுத்தியுள்ளதாக கே.ஜி.எம்.யு. செய்தித் தொடர்பாளர் கே.கே. சிங் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பல்கலைக்கழக செய்தி தொடர்பாளர் கே.கே. சிங் வெளியிட்ட அறிவிப்பில், “சராசரியாக சைவ உணவு உண்ணும், வயது வந்தோருக்கான தினசரி புரதத் தேவை 100 கிராம் ஆகும்.

அசைவ உணவு உண்பவர்களுக்கும் புரதச்சத்து கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், பரிந்துரைக்கப்பட்ட தினசரி உட்கொள்ளும் அளவைப் பூர்த்தி செய்வதற்காக, விடுதி உணவகங்கள் இனி மீல் மேக்கர் (Soya Chunks), பன்னீர் மற்றும் சோயா பன்னீர் (Tofu) மற்றும் பிற சைவ புரதச்சத்து நிறைந்த உணவுகளை இனி வழங்கும்” என்று கூறினார்.

இதையடுத்து பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சோனியா நித்யானந்த் கூறுகையில், “நமது நாட்டில் அதிக வெப்பமும் ஈரப்பதமும் நிலவுகிறது. எனவே, அசைவ உணவை, குறிப்பாகப் பெருமளவில் தயாரிக்கும்போது சுகாதாரத்தைப் பேணுவது கடினம்.

இது மிகவும் ஆரோக்கியமான ஒரு தேர்வாக இருப்பதாலும், இரைப்பை குடல், குறிப்பாக பெருங்குடல் புற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் மிகவும் குறைவு என்பதாலும், தற்போது உலகம் முழுவதும் அதிகமான மக்கள் சைவ உணவுப் பழக்கத்திற்கு மாறுவதை நாம் காண்கிறோம்.

அசைவ உணவு குறித்த ஆளுநரின் பரிந்துரை மிகவும் நேர்மறையானது” என்று கூறினார்.