கோவாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், தனது கட்சி ஆட்சி அமைத்தால், 5 நாட்களுக்குள் எத்தனால் பெட்ரோலுக்கு தடை விதிக்கப்படும் என ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இல்லையென்றால் அரசியலைவிட்டு விலக தயார் எனவும் சவால் விடுத்துள்ளார். கோவாவில் நேற்று நடைபெற்ற எத்தனால் பெட்ரோல் எரிபொருள் கொள்கைக்கு எதிரான டவுன்ஹால் கூட்டத்தில் பேசிய அவர் இந்த அதிரடி தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளார்.
கோவா மக்கள் சந்திப்புக் கூட்டம், எத்தனால் பெட்ரோலுக்கு எதிரான ஆம் ஆத்மி கட்சியின் நாடு தழுவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். இப்பிரச்னை தொடர்பான தேசிய மக்கள் சந்திப்பை ஆக.1ம் தேதியன்று டெல்லியில் நடத்தியது.
தொடர்ந்து மேற்கு வங்கம், குஜராத், ஹரியானா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, பீகார் மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
40 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கோவா சட்டமன்றத்திற்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது கோவாவில் இரண்டு ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.