நேபாள பிரதமர் பாலேந்திர ஷா இன்று இந்தியா வருகை தந்துள்ளார். நாளை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.
நேபாளத்தில் கடந்த ஆண்டு ஜென் இசட் இளைஞர்கள் போராட்டத்தால் சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
இதன்பின் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று இளம் தலைவர் பாலேந்திர ஷா அந்நாட்டின் பிரதமர் ஆனார்.
பிரதமர் ஆன பின் முதல் முறையாக பாலன் ஷா இந்தியா வந்துள்ளார்.
புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து நேபாளம் - இந்தியா இடையிலான உறவு தேக்க நிலையை எட்டிய நிலையில் பாலேந்திர ஷா வருகை முக்கியத்துவம் பெறுகிறது.
அண்டை நாடாக நேபாளம் உள்ளதால் அதன் ஒத்துழைப்பு இந்தியாவுக்கு முக்கியமானதாகும். ஏற்கனவே பாலேந்திர ஷா வருகை தர இருந்ததாக பலமுறை ஊகங்கள் எழுந்து அடங்கின.
இந்த நிலையில் அவரின் வருகை தற்போது நிகழ்ந்துள்ளது
வெளியுறவு அமைச்சகத்தின்படி, பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் பயணமாக நேபாள பிரதமர் பலேந்திர ஷா இந்தியாவுக்கு வந்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் பதவியேற்ற பிறகு அவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
மேலும், பிரதமராக அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணமும் இதுவே ஆகும்.
அவருடன் நிதி அமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே, வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கானல், பிரதமரின் தலைமை ஆலோசகர் குமார் பியன்ஜங்கர் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட 34 பேர் கொண்ட குழுவும் வருகை தர உள்ளது.
நவம்பர் 23ஆம் தேதி (நாளை), அவர் பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது, வர்த்தகம், எரிசக்தி, முதலீடு, சாலை மற்றும் ரெயில் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பயணம், இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான பொருளாதார மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
நேபாள வெளியுறவுச் செயலாளர் அம்ரித் பகதூர் ராயின் கூற்றுப்படி, இரு நாடுகளின் பிரதமர்களும் தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தை நடத்துவார்கள், அதனைத் தொடர்ந்து ஒரு கூட்டுச் செய்தியாளர் சந்திப்பும் நடைபெறும்.
மேலும், பிரதமர் மோடி, நேபாளப் பிரதமர் மற்றும் அவரது தூதுக்குழுவினருக்கு மரியாதை செலுத்தும் வகையில் மதிய விருந்தையும் அளிக்கவுள்ளார்.
மேலும் நேபாளத்தில் முதலீட்டை அதிகரிப்பதற்காக வர்த்தகக் கருத்தரங்கு நடத்தப்படவுள்ளது.
நேபாளத்தில் இந்திய முதலீட்டை ஊக்குவிப்பதும், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகக் கூட்டாண்மைக்கான புதிய வாய்ப்புகளை வழங்குவதும் இதன் நோக்கமாகும்.