இந்தியா

கொல்கத்தாவில் பிறந்த பெண் குழந்தைக்கு கொரோனா தொற்று: சாவின் விழிம்பில் இருந்து காப்பாற்றிய மருத்துவர்

கொல்கத்தாவில் கொரோனா தொற்றுடன் பிறந்த பெண் பச்சிளம் குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றினர்.

மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் புதிதாக பிறந்த ஒரு பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பதை மருத்துவர்கள் கண்டு பிடித்தனர்.

இதையடுத்து சீரற்ற இதய துடிப்பு மற்றும் சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளால் உயிருக்கு போராடிய குழந்தைக்கு உரிய சிகிச்சை அளித்து மருத்துவர்கள் காப்பாற்றினர்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பெல்லி வியூ மருத்துவமனையில், அர்பிதா சாந்த்ரா என்ற கர்ப்பிணி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரின் கருப்பையில் உள்ள குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்ததை கண்டறிந்தனர்.

பிறந்த குழந்தைக்கு கொரோனா தொற்று

இதையடுத்து கொரோனா தொற்றுடன் பிறந்த அந்த பெண் குழந்தை, சுவாசக் கோளாறு பிரச்சனையால் அவதிப்பட்டது.

இதற்கிடையில் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அந்த பெண் குழந்தைக்கு செப்சிஸ் நோய் இருப்பதையும் கண்டறிந்தனர்.

செப்சிஸ் நோய் காரணமாக பிறந்த குழந்தைக்கு மூச்சுத் திணறலும் அதிகப்படியான இதயத் துடிப்பும் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்த பச்சிளம் குழந்தைக்கு மருத்துவர்கள் முதலில் தேவையான ஆக்சிஜனை வழங்கினர்.

குழந்தையின் நிலைமை மேலும் மோசமடைந்ததால், செயற்கை சுவாச உதவியுடன் நுரையீரலுக்குள் காற்றை செலுத்தினர்.

இதையடுத்து பிறந்த குழந்தைக்கு புரோ-பி.என்.பி மருத்துவ பரிசோதனையை மருத்துவர்கள் செய்தனர். இதன்மூலம் கொரோனா மற்றும் செப்சிஸ் நோய் இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது.

மோசமான குழந்தையின் உடல்நிலை

அடுத்த ஒவ்வொரு மணி நேரத்திலும் குழந்தையின் உடல் நிலை மிகவும் மோசமாகி காணப்பட்டது.

மேலும் கொரோனா பரிசோதனை முடிவை பெற ஐந்து நாட்கள் ஆகும் என்பதால், மருத்துவர்கள் குழந்தைக்கு சிகிச்சையை தொடர்ந்து அளித்தனர்.

இதையடுத்து ஐந்து நாட்களாக அளிக்கப்பட்ட சிகிச்சையை தொடர்ந்து, குழந்தையின் உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது.

இருந்தாலும் குழந்தையின் உடல்நிலை முழுமையாக குணமடையும் வரை, அந்த பெண் குழந்தையை மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் வைத்திருந்தனர்.

மருத்துவர் சாந்தனு ரே

இதுகுறித்து பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சை அளித்த குழந்தை நல மருத்துவர் சாந்தனு ரே கூறுகையில், “செப்சிஸ் மற்றும் கொரோனா ஆகிய இரண்டு நோய் தொற்றுகளும், உயிருக்கு ஆபத்தானவை என்பதால், நாங்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தோம்.

எம்.ஐ.எஸ்-என் நோயால் ஏற்படும் இறப்பு விகிதம் 50 சதவீதமாக உள்ளது. குழந்தையின் உடல்நிலை வேகமாக மோசமடைந்து வந்ததால், நாங்கள் விரைவாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம்.

இதன் காரணமாக வைரஸ் மற்றும் பாக்டீரியா ஆகியவற்றிற்கு எதிராக ஆண்டிபாடிகளாக செயல்படும் காமா குளோபுலின் என்ற ரத்த புரதத்தை குழந்தைக்கு செலுத்த முடிவு செய்தோம். ஐந்தாவது நாளில் குழந்தையின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

இருந்தாலும் பூரண குணமடையும் வரையில், நாங்கள் அந்த பச்சிளம் குழந்தையை தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைத்திருந்தோம்” என மருத்துவர் கூறினார்.

SCROLL FOR NEXT